உலகக்கோப்பை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பிசிசிஐ சார்பில் ரூ.51 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை இறுதி ஆட்டம், ஞாயிற்றுக்கிழமை மாலை நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் கிரிக்கெட் திடலில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
தொடர்ந்து, களமிறங்கிய இந்திய அணியின் வீராங்கனைகள் 50 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட்டுகளை இழந்து 298 ரன்களை குவித்திருந்தனர்.
சேஸிங்கில் களமிறங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு 299 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நிதானமாக விளையாடி வந்த தென்னாப்பிரிக்க அணி முதல் 25 ஓவர்களில் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.
இருப்பினும், தென்னாப்பிரிக்காவின் கேப்டனும், தொடக்க வீராங்கனையுமான லாரா வோல்வார்ட் 98 பந்துகளில் 101 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பந்துவீச்சில் இந்திய வீராங்கனைகள் ஷஃபாலி வர்மா, தீப்தி சர்மா ஆகியோர் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை எடுத்து அசத்தினர்.
45.3 ஓவர்களில் தென்னாப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.
இதன்மூலம், 52 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி, இந்திய அணி ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
வெற்றிபெற்ற இந்திய அணியின் வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி, முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் உலகக்கோப்பை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பிசிசிஐ சார்பில் ரூ.51 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை பிசிசிஐயின் செயலர் தேவஜித் சைகியா வெளியிட்டுள்ளார்.
இந்த பரிசுத்தொகை வீரர்கள், பயிற்சியாளர்கள் உள்பட அனைவருக்கும் பரிந்தளிக்கப்படவிருக்கிறது. அதேசமயம் சாம்பியன் அணியான இந்திய மகளிர் அணிக்கு ஐசிசி தரப்பில் ரூ.39.78 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.