மகளிர் ஒரு நாள் உலக கோப்பைத் தொடரில் இந்திய அணியின் வெற்றிக்குப் பங்காற்றிய தொடக்க ஆட்டக்காரர் பிரதிகா ராவலுக்கு பதக்கம் வழங்காத சம்பவம் சர்ச்சையாகியுள்ளது.
மகளிருக்கான 13-வது ஒரு நாள் உலகக் கோப்பைத் தொடர் இறுதி ஆட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் திடலில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை வென்றது.
போட்டிக்குப் பின்னர், இந்திய அணி வீராங்கனைகள், அணி நிர்வாகிகள், ரசிகர்கள் உள்ளிட்டோர் மகிழ்ச்சியில் திளைத்தனர். இந்திய அணிக்கு கோப்பை வழங்கியபோது இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர் பிரதிகா ராவல், மூவர்ணக்கொடியைப் போர்த்திக் கொண்டு, கட்டுடன் சக்கர நாற்காலியில் வந்து கலந்துகொண்டார்.
தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகளுக்கு எதிரான இந்திய அணி தொடர் தோல்விகளைச் சந்தித்த வேளையில் தொடக்க ஆட்டக்காரராக ரன் குவித்து அசத்திய பிரதிகா ராவல், நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 122 ரன்களை விளாசியிருந்தார்.
லீக் சுற்றுப் போட்டியின்போது வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் பீல்டிங் செய்தும் வலது காலில் காயம் ஏற்பட்டு தொடரில் இருந்து வெளியேறினார். இதனால், பிரதிகாவுக்குப் பதிலாக இளம் வீராங்கனை ஷபாலி வர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு, அவரும் அரையிறுதியில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகிப் பட்டத்தை வென்றார்.
போட்டிக்குப் பின்னர் இந்திய அணிக்கு வெற்றிக் கோப்பையும், பதக்கங்களும் வழங்கப்பட்டன. இந்த நிலையில், உலகக் கோப்பைத் தொடரில் 308 ரன்கள் எடுத்த பிரதிகா ராவலுக்கு, சாம்பியனுக்கான பதக்கத்தை ஐசிசி வழங்காதது சர்ச்சையை எழுப்பியுள்ளது.
ஐசிசி விதிமுறைகளின்படி, இறுதியாக 15 பேர் கொண்ட அணியில் உள்ள வீரர், வீராங்கனைகளுக்கு மட்டுமே பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. அரையிறுதிக்கு முன்பாக பிரதிகா ராவலுக்குப் பதிலாக ஷபாலி வர்மா மாற்றப்பட்டதால், இந்தியாவின் வெற்றியில் அவர் முக்கிய பங்கு வகித்த போதிலும், அவர் வெற்றியாளருக்கான பதக்கத்தை தவறவிட்டார்.
இதேபோன்றுதான், 2003 ஆண்கள் உலகக் கோப்பையிலும் இதே நிலை ஏற்பட்டது, ஆஸ்திரேலியாவின் ஜேசன் கில்லெஸ்பி, நான்கு ஆட்டங்களில் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்திய போதிலும், காயத்திற்குப் பிறகு மாற்றப்பட்டார். இதனால், அவரும் தனது பதக்கத்தைத் தவறவிட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.