தில்லி கார் வெடிப்பு சம்பவம் எதிரொலியாக இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் போட்டிக்காக கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
தில்லி செங்கோட்டை அருகே திங்கள்கிழமை மாலை 6.50 மணியளவில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறிய சம்பவத்தில் 13 பேர் பலியான நிலையில், 24 பேர் காயமடைந்து தில்லி லோக் நாயக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவம் வெடி விபத்தா? அல்லது நாசவேலையா? என்பது குறித்து, சம்பவம் நடந்து 12 மணி நேரத்துக்கு மேல் ஆகியும் அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இதனால், தில்லி மட்டுமின்றி நாடு முழுவதிலும் உள்ள மும்பை, சென்னை, கொல்கத்தா போன்ற முக்கிய நகர்களின் மெட்ரோ நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் காவல் துறையினர் கடும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி வருகிற 14 ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் திடலில் நடைபெறவுள்ளது.
இதனையொட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கெட் திடலில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் இன்று(நவ. 11) முதல் பயிற்சியைத் துவங்கியுள்ளன. தில்லி கார் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து இரு நாட்டு அணி வீரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டல்கள், கிரிக்கெட் திடலுக்குச் செல்லும் வழி, வெளியேறும் வழி, பயிற்சி கூடங்கள் உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
கொல்கத்தா காவல் ஆணையர் மனோஜ் வர்மா, ஈடன் கார்டன் கிரிக்கெட் திடலுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து கொல்கத்தா காவல் துறை அதிகாரிகள் மற்றும் மேற்கு வங்க கிரிக்கெட் சங்க அதிகாரிகள் இடையே ஒரு அவசரக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விளையாட்டு வீரர்கள் மற்றும் உதவியாளர்கள், பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டதாக மேற்கு வங்க கிரிக்கெட் சங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.