காயத்திலிருந்து மீண்டு வருவது ஒருபோதும் எளிது கிடையாது என இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நாளை (நவம்பர் 14) தொடங்குகிறது.
கடந்த ஜூலையில் மான்செஸ்டரில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது, இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டரான ரிஷப் பந்த்துக்கு பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அந்த காயத்திலிருந்து அண்மையில் குணமடைந்த ரிஷப் பந்த், தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார். அவர் நான்கு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார்.
இந்த நிலையில், காயத்திலிருந்து மீண்டு வருவது ஒருபோதும் எளிது கிடையாது எனவும் ஆனால், காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் நன்றாக விளையாடத் தொடங்கிவிட்டதாகவும் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: காயம் ஏற்பட்ட பிறகு அதிலிருந்து மீண்டு வருவது ஒருபோதும் எளிது கிடையாது. ஆனால், கடவுளுடைய ஆசிர்வாதம் எனக்கு எப்போதும் இருக்கிறது. கடவுளுடைய ஆசிர்வாதத்தினால் நான் இந்த முறையும் காயத்திலிருந்து மீண்டு வந்துள்ளேன்.
ஒவ்வொரு முறை நான் ஆடுகளத்துக்குள் நுழையும்போதும் நன்றியுணர்வுடன் இருக்க முயற்சி செய்கிறேன். அதன் காரணமாகவே ஆடுகளத்துக்குள் நுழையும்போது, மேலே பார்த்து கடவுளுக்கும், என்னுடைய பெற்றோருக்கும், எனக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கும் நன்றி கூறுகிறேன். நான் என்ன செய்தாலும் அதில் என்னுடைய நூறு சதவிகித உழைப்பை கொடுக்கிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.