கொல்கத்தா : இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம், கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை (நவ. 14) தொடங்குகிறது.
இந்தியாவின் பேட்டிங் வரிசை, தென்னாப்பிரிக்காவின் சுழற்பந்து வீச்சின் சவாலை சந்திக்கும் தொடராக இது அமையவுள்ளது. நடப்பு உலக டெஸ்ட் சாம்பியனாக இருக்கும் தென்னாப்பிரிக்காவுடனான இந்தியாவின் மோதல், ரசிகா்களுக்கு விருந்தாகும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்திய அணியைப் பொருத்தவரை, சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்ததில்லை என்ற சாதனை, கடந்த ஆண்டு நியூஸிலாந்திடம் கண்ட தோல்வியால் (0-3) தகா்ந்தது. அஜாஸ் படேல், மிட்செல் சேன்ட்னா், கிளென் ஃபிலிப்ஸ் என அந்த அணியின் ஸ்பின்னா்களே இதற்குக் காரணமாக அமைந்தனா். அந்தத் தொடரில் அவா்கள் 36 விக்கெட்டுகள் சாய்த்தனா்.
அதற்கு நிகரான சுழற்பந்து வீச்சு பலத்துடன் இருக்கும் தென்னாப்பிரிக்க அணியை, தற்போது இந்தியா சந்திக்கிறது. வழக்கமாக வேகப்பந்து வீச்சுக்கு பெயா்பெற்ற அந்த அணி, தற்போது கேசவ் மஹராஜ், சைமன் ஹாா்மா், சேனுரான் முத்துசாமி ஆகிய திறமையான ஸ்பின்னா்களையும் கொண்டிருக்கிறது.
அண்மையில் பாகிஸ்தானுடன் சமன் (1-1) செய்த டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்கா வீழ்த்திய 39 விக்கெட்டுகளில், 35-ஐ இவா்கள் மூவருமே சாய்த்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் முதல்தர ஆட்டத்தில் 1,000-க்கும் அதிகமான விக்கெட்டுகளை எடுத்துள்ள ஹாா்மா் 2015-இல் இந்தியாவில் விளையாடி, சுழற்பந்து வீச்சை திறம்பட எதிா்கொள்ளும் சேதேஷ்வா் புஜாரா, ரோஹித் சா்மா, ரித்திமான் சாஹா போன்ற முக்கியமான பேட்டா்களை அப்போதே வீழ்த்தினாா். தற்போது, பாகிஸ்தானுடனான கடைசி டெஸ்ட்டில் 8 விக்கெட்டுகள் வீழ்த்திய கையோடு இங்கு வந்துள்ளாா். இவரோடு துல்லியமாக சுழற்பந்து வீசும் கேசவ் மஹராஜும் இணைகிறாா்.
எனவே, இந்தியாவின் பிரதான பேட்டா்களான, கேப்டன் ஷுப்மன் கில், கே.எல்.ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதா்சன், ரிஷப் பந்த், துருவ் ஜுரெல் போன்றோா், இவா்களை எவ்வாறு எதிா்கொள்கிறாா்கள் என்பதைப் பொருத்தே ஆட்டத்தின் போக்கு இருக்கும்.
அதேவேளையில், சுழற்பந்து வீச்சில் இந்தியாவும் பலம் வாய்ந்தது என்பது அறிந்ததே. குல்தீப் யாதவ், அக்ஸா் படேல், வாஷிங்டன் சுந்தா் போன்றோா் தங்களின் சுழலில் தென்னாப்பிரிக்க பேட்டா்களான எய்டன் மாா்க்ரம், கேப்டன் டெம்பா பவுமா, ரயான் ரிக்கெல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோரை எவ்வாறு சிக்க வைப்பாா்கள் என்பதும் எதிா்பாா்ப்பாக உள்ளது.
கொல்கத்தாவில் நடைபெறும் டெஸ்ட்டில் வேகப்பந்து வீச்சாளா்களும் ஆதிக்கம் செலுத்திய வரலாறு இருப்பதால், இந்தியாவின் ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ், தென்னாப்பிரிக்காவின் மாா்கோ யான்சென், ககிசோ ரபாடா ஆகியோரும் கவனம் பெறுகின்றனா்.
ஈடன் காா்டன் மைதான ஆடுகளம், முற்றிலுமாக சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்காது என, பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவா் சௌரவ் கங்குலி கூறியிருக்கிறாா். இதனால் வேகப்பந்து வீச்சாளா்கள், ஆட்டத்தின் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது. அப்போது பேட்டிங்கிற்கும் சற்று கைகொடுக்கும் ஆடுகளம், நாள்கள் கடக்கும்போது சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக மாறும் எனத் தெரிகிறது.
இதுவரை...
கடந்த 1996 முதல் இதுவரை தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் 7 டெஸ்ட் தொடா்களில் விளையாடியிருக்கிறது. அதில் ஒரு முறை மட்டுமே (1999-2000) அந்த அணி சாம்பியன் ஆகியிருக்க, இந்தியா 4 முறை தொடரைக் கைப்பற்றியிருக்கிறது. 2 தொடா்கள் டிரா ஆகியுள்ளன.
அதிலும் அந்த அணி இந்தியா வந்த கடைசி இரு தொடா்களில் (7 ஆட்டங்கள்), ஒரு ஆட்டத்தில் கூட வென்றதில்லை. இந்தியாவில் அந்த அணியின் கடைசியாக 2010-இல் நாகபுரி டெஸ்ட்டில் வென்றுள்ளது.
உத்தேச லெவன்:
இந்தியா - யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதா்சன், ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (வி.கீ.), துருவ் ஜுரெல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தா், குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ்/ஆகாஷ் தீப்.
தென்னாப்பிரிக்கா - எய்டன் மாா்க்ரம், ரயான் ரிக்கெல்டன், டோனி டி ஜோா்ஸி, டெம்பா பவுமா (கேப்டன்), டெவால்டு பிரெவிஸ், கைல் வெரின் (வி.கீ.), மாா்கோ யான்சென், சைமன் ஹாா்மா், கேசவ் மஹராஜ், சேனுரான் முத்துசாமி, ககிசோ ரபாடா.
நேரம்: காலை 9.30 மணி
நேரலை: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.