தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் இன்று (நவம்பர் 14) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி அதன் முதல் இன்னிங்ஸில் 159 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அய்டன் மார்க்ரம் அதிகபட்சமாக 31 ரன்களும், வியான் முல்டர் மற்றும் டோனி டி ஸார்ஸி தலா 24 ரன்களும் எடுத்தனர். ரியான் ரிக்கல்டான் 23 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கத் தவறினர்.
இந்தியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். முகமது சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்டுகளையும், அக்ஷர் படேல் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து, முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்துள்ளது.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல் 13 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்திய அணி தென்னாப்பிரிக்காவைக் காட்டிலும் 122 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.