தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு முதல் ஓவரை கொடுக்காதது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியாவை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.
124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 93 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
ஆட்டத்தின் மூன்றாம் நாளான இன்று தென்னாப்பிரிக்க அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில், 63 ரன்கள் என்ற முன்னிலையுடன் ஆட்டத்தைத் தொடங்கியது. கேப்டன் டெம்பா பவுமா மற்றும் கார்பின் போஸ்ச் இருவரும் களத்தில் இருந்தனர்.
இந்த இணை சிறப்பாக விளையாடி அணியின் முன்னிலையை 100 ரன்களுக்கும் அதிகமாக உயர்த்தியது. இந்த இணை 8-வது விக்கெட்டுக்கு 44 ரன்கள் சேர்த்து அசத்தியது.
அனில் கும்ப்ளே கேள்வி
தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், மூன்றாம் நாள் ஆட்டத்தை இந்திய அணியின் சிறந்த பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை வைத்து ஏன் ஆரம்பிக்கவில்லை என அனில் கும்ப்ளே கேள்வியெழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் ஜியோஸ்டாரில் பேசியதாவது: 124 ரன்கள் என்ற இலக்கு கொஞ்சம் அதிகமானது. இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியபோது, தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகளை இழந்து 63 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. டெம்பா பவுமா களத்தில் இருந்தார். எல்லைக் கோடுகளை ஒட்டி ஃபீல்டிங்கை நிறுத்திவிட்டு, சிறந்த பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு முதல் ஓவரை கொடுக்காதது கேள்வியை எழுப்புகிறது. இந்திய அணி சுழற்பந்துவீச்சை பயன்படுத்தியது. ஆனால், தென்னாப்பிரிக்க அணியின் கடைசி மூன்று விக்கெட்டுகளையும் வேகப் பந்துவீச்சாளர்களே கைப்பற்றினர். தென்னாப்பிரிக்க அணி மிகவும் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது என்றார்.
2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்க அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி குவாஹாட்டியில் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இந்த மாதிரியான ஆடுகளத்தைதான் நாங்கள் கேட்டோம்; தோல்விக்குப் பிறகு கௌதம் கம்பீர் பேச்சு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.