அடுத்த ஐபிஎல் சீசனுக்காக லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் தன்னை தக்கவைத்தற்காக நன்றி தெரிவித்துக் கொள்வதாக அய்டன் மார்க்ரம் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் வருகிற டிசம்பர் 16 ஆம் தேதி அபுதாபியில் நடைபெறவுள்ளது. மினி ஏலத்திற்கு முன்பாக அணிகள் தங்களுக்குத் தேவையான வீரர்களை தக்கவைத்துக் கொள்ளவும், விடுவிக்க விரும்பும் வீரர்களை விடுவிக்கவும் கடந்த நவம்பர் 15 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடும் 10 அணிகளும் தங்களுக்குத் தேவையான வீரர்களை தக்கவைத்தனர். லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடி வரும் தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர் அய்டன் மார்க்ரம் அந்த அணியால் தக்கவைக்கப்பட்டார்.
இந்த நிலையில், அடுத்த ஐபிஎல் சீசனுக்காக லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் தன்னை தக்கவைத்தற்காக அய்டன் மார்க்ரம் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் வெளியிடப்பட்டுள்ள விடியோவில் அவர் பேசியிருப்பதாவது: கடந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் இணைந்து விளையாடியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அணியில் உள்ள வீரர்களுடன் நட்புறவை வளர்த்துக் கொண்டேன். அதனால், லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் மீண்டும் விளையாட வாய்ப்பளித்ததற்கு நன்றி கூறிக் கொள்ள கடமைப் பட்டிருக்கிறேன். லக்னௌ அணிக்காக அடுத்த சீசனில் விளையாடவுள்ளதை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என்றார்.
கடந்த ஐபிஎல் சீசனில் 14 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 7-வது இடம் பிடித்தது.
கடந்த சீசனில் லக்னௌ அணிக்காக 13 போட்டிகளில் விளையாடிய அய்டன் மார்க்ரம் 445 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.