தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஏற்பட்ட தோல்விக்கு அனைவரும் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரை விமர்சிப்பது ஏன் என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோட்டக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியாவை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் முதல் முறையாக தென்னாப்பிரிக்க அணி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்தது.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, சொந்த மண்ணில் ஏற்படும் 4-வது டெஸ்ட் போட்டி தோல்வி இதுவாகும். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரை பலரும் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர். ஆடுகளத்தை சரியாக தேர்வு செய்யாததே தோல்விக்கு காரணம் எனவும் விமர்சித்தனர்.
இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஏற்பட்ட தோல்விக்கு அனைவரும் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரை மட்டுமே விமர்சிப்பது ஏன் என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோட்டக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: அனைவரும் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மீதே குறை கூறுகின்றனர். இதனை நான் கூறுவதற்கு காரணம் இருக்கிறது. ஏனெனில், இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருக்கும் நான் தலைமைப் பயிற்சியாளரை ஒருதலைபட்சமாக விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. சிலர் கௌதம் கம்பீர் மீது பழிசுமத்த வேண்டும் என்பதை குறிக்கோளாக் கொண்டு விமர்சிப்பதாக நினைக்கிறேன். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், இவ்வாறு விமர்சிப்பது மிகவும் மோசமானது.
இந்திய அணி வீரர்கள் விளையாடிய விதம் குறித்து ஏன் யாரும் எந்தவொரு கேள்வியும் கேட்கவில்லை. பேட்டர்கள் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படாமல் தலைமைப் பயிற்சியாளரை குறிவைத்தே விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது ஆச்சரியமளிக்கிறது. திடல் பராமாரிப்பாளர்கள் மீது பழிசுமத்தக் கூடாது என்பதற்காக கடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கான அனைத்துப் பழிகளையும் கௌதம் கம்பீர் தன் மீது சுமத்திக் கொண்டார் என்றார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (நவம்பர் 22) முதல் குவாஹாட்டியில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.