ஆஷஸ் தொடரில் பெர்த்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 205 ரன்களை வெற்றி இலக்காக இங்கிலாந்து நிர்ணயித்துள்ளது.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் தொடரின் முதல் போட்டி பெர்த்தில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 172 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 132 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 40 ரன்கள் முன்னிலை பெற்றது.
ஆஸ்திரேலியாவுக்கு 205 ரன்கள் இலக்கு
40 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி, 164 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஸாக் கிராலி மீண்டும் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். அதிகபட்சமாக கஸ் அட்கின்சன் 37 ரன்களும், ஆலி போப் 33 ரன்களும் எடுத்தனர். பென் டக்கெட் 28 ரன்களும், பிரைடான் கார்ஸ் 20 ரன்களும் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்காட் போலாண்ட் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். மிட்செல் ஸ்டார்க் மற்றும் பிரண்டன் டாக்கெட் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
பெர்த் டெஸ்ட்டில் வேகப் பந்துவீச்சாளர்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். மிட்செல் ஸ்டார்க் 10 விக்கெட்டுகள், பிரண்டன் டாக்கெட் 5 விக்கெட்டுகள், பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகள், ஸ்காட் போலாண்ட் 4 விக்கெட்டுகள், பிரைடான் கார்ஸ் 3 விக்கெட்டுகள், ஜோஃப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டுகள், கேமரூன் கிரீன் ஒரு விக்கெட் கைப்பற்றியுள்ளனர்.
இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் 204 ரன்கள் முன்னிலை பெற்றதால், முதல் டெஸ்ட்டில் வெற்றி பெற ஆஸ்திரேலிய அணிக்கு 205 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.