தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக இந்திய அணியின் துணைக் கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குவாஹாட்டியில் நடைபெற்ற்றது. இந்தப் போட்டியில் 408 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியைத் தழுவி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது.
இந்திய அணியின் மோசமான தோல்விக்குப் பிறகு அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அவர் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்ற விமர்சனங்களும் எழுந்தன.
இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும், இந்திய அணி வலுவாக மீண்டு வரும் எனவும் அணியின் துணைக் கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது: கடந்த இரண்டு வாரங்களாக நாங்கள் நன்றாக விளையாடவில்லை என்ற உண்மையிலிருந்து தப்பித்துக் கொள்ளப் போவதில்லை. ஒரு அணியாகவும், தனிப்பட்ட வீரர்களாகவும் நாங்கள் எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி கோடிக்கணக்கான இந்திய மக்களின் முகங்களில் மகிழ்ச்சியைக் கொண்டுவர வேண்டும்.
இந்த முறை கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை. ஆனால், அணியாகவும், தனிப்பட்ட வீரர்களும் எப்படி செயல்பட வேண்டும் என்பதை விளையாட்டு கற்றுக் கொடுக்கிறது. அதற்கேற்றவாறு அணியாகவும், தனிப்பட்ட விதத்திலும் வீரர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். இந்திய அணியின் திறன் குறித்து வீரர்கள் அனைவருக்கும் தெரியும். கடினமாக உழைத்து மீண்டும் வலுவாக திரும்பி வருவோம் எனப் பதிவிட்டுள்ளார்.
கழுத்து வலியின் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து கேப்டன் ஷுப்மன் கில் விலகிய நிலையில், அணியை ரிஷப் பந்த் கேப்டனாக வழிநடத்தியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.