டெஸ்ட் போட்டிகளில் சொந்த மண்ணில் கடந்த 11 ஆண்டுகளில் வெறும் இரண்டு சதங்கள் மட்டுமே அடித்துள்ளது குறித்து இந்திய வீரர் கே.எல்.ராகுல் பேசியுள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான கே.எல்.ராகுல் கடந்த 2014 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். கடந்த 11 ஆண்டுகளில் கே.எல்.ராகுல் இந்திய அணிக்காக 63 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 11 சதங்கள் (மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இன்றைய சதத்தையும் சேர்த்து) விளாசியுள்ளார். இருப்பினும், சொந்த மண்ணில் அவர் வெறும் இரண்டு சதங்கள் மட்டுமே விளாசியுள்ளார்.
இந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளில் சொந்த மண்ணில் வெறும் இரண்டு சதங்கள் மட்டுமே விளாசியுள்ளது குறித்து கே.எல்.ராகுல் பேசியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: சொந்த மண்ணில் ஏன் அதிக சதங்கள் அடிக்கவில்லை என்பது உண்மையில் உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், கடந்த ஓராண்டாக என்னுடைய பேட்டிங்கில் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளதாக நினைக்கிறேன். நாளுக்கு நாள் என்னுடைய ஆட்டத்தில் முன்னேற்றம் காண்பது மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது.
வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கூடுதல் வேகம் மற்றும் பௌன்சர்கள் உள்ள ஆடுகளங்களில் விளையாடும்போது, போட்டிகள் மிகுந்த சவாலளிப்பதாக இருக்கும். ஆனால், சொந்த மண்ணில் விளையாடும்போது பிளேயிங் லெவனில் மூன்று சுழற்பந்துவீச்சாளர்கள் இருப்பார்கள். ஃபீல்டிங் பவுண்டரி கோட்டுக்கு அருகில் இருப்பார்கள். அதனால், பேட்டர்கள் ஒன்று, இரண்டு என ரன்கள் சேர்க்க வேண்டியிருக்கும். எளிதில் பவுண்டரிகள் அடிக்க முடியாது. ஒன்று, இரண்டு என ரன்கள் எடுத்து விளையாடுவதில் என்னுடைய உழைப்பைக் கொடுத்து வருகிறேன். கடந்த ஓராண்டாக இதில் கவனம் செலுத்தி வருகிறேன். சொந்த மண்ணில் இத்தனை ஆண்டுகளாக இந்த விஷயத்தில் கவனம் செலுத்தத் தவறியதாக நினைக்கிறேன் என்றார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுல் முதல் முறையாக சொந்த மண்ணில் சதம் விளாசியிருந்தார். அதன் பின், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அகமதாபாதில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட்டில் சதம் விளாசி சொந்த மண்ணில் இரண்டாவது சதத்தைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: முதல் சதத்தை இந்திய ராணுவத்துக்கு சமர்ப்பித்த துருவ் ஜுரெல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.