இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரஷித் கான் விளையாடுவாரா?
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் விளையாடுவாரா என்பது குறித்து...
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் விளையாடுவதற்கு வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி முதலில் நடைபெறுகிறது. இந்தப் போட்டி வருகிற ஜூன் 6 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் விளையாடுவதற்கு வாய்ப்பில்லை எனக் கூறப்படுவது முக்கியத்துவம் பெறுகிறது.
Advertisement
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடுவேனா என்ற கேள்விக்கு பதிலளிப்பது மிகவும் கடினம். அறுவை சிகிச்சைக்குப் பிறகு என்னுடைய மருத்துவர் எனக்குக் கூறிய முதல் அறிவுரை, சிவப்பு பந்து போட்டிகளிலிருந்து விலகி இருங்கள் என்பதுதான். ஆனால், நான் ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினேன்.
நீங்கள் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட வேண்டாம் என நினைத்தால், சிவப்பு பந்து போட்டிகளில் விளையாடுங்கள் என என்னுடைய மருத்துவர் கூறினார். ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்கு நான் உடல்தகுதியுடன் இருக்கிறேன். அதனால், ஆப்கானிஸ்தான் அணிக்காக ஒருநாள் போட்டிகளில் நீண்ட காலம் விளையாடுவேன். நீண்ட காலம் விளையாட வேண்டும என நினைக்கும்போது, நான் கவனமாகவும் இருக்க வேண்டியிருக்கிறது.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடுவேனா என்ற கேள்விக்கு பதிலளிப்பது கடினம். ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்காக நான் தயாராக வேண்டியிருக்கிறது. ஓராண்டில் ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடினால், 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக என்னால் 100 ஆண்டுகள் விளையாட முடியாது. அதனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் எனக்கு எந்த ஒரு இலக்கும் இல்லை என்றார்.
கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் தகுதியை ஆப்கானிஸ்தான் அணி பெற்றது. 2017 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை ஆப்கானிஸ்தான் அணி 12 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளது. இந்த 12 போட்டிகளில் ரஷித் கான் வெறும் 6 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.