தொடரும் சாதனைப் பயணம்!
சில நேரங்களில் டெஸ்ட் போட்டிகள், 50 ஓவர் போட்டிகளில் சற்று சறுக்கினாலும், 20 ஓவர் போட்டிகளில் தனக்கு நிகர் எந்த அணியும் இல்லை என்பதை இந்திய அணி மீண்டும் நிரூபித்திருக்கிறது.
இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் ஆகி, டி20 போட்டிகளில் தன்னிகரில்லா அணி என்பதை இந்தியா நிரூபித்திருக்கிறது. இதன்மூலம், மூன்றாவது முறையாக கோப்பையை வென்றது. அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் கோப்பையைக் கைப்பற்றியது, போட்டியை நடத்திய நாடு பட்டம் வென்றது ஆகிய முப்பெரும் சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.
2007, 2024, 2026 என மூன்று முறை இந்திய அணி கோப்பையை வென்றதன் மூலம் இந்தச் சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் தலா இரண்டு முறையும், பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா ஆகியவை தலா ஒரு முறையும் வென்றுள்ளன.
டி20 உலகக் கோப்பை போட்டி இந்தியா, இலங்கையில் கடந்த பிப். 7 முதல் மார்ச் 8 வரை நடைபெற்றது. 20 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் மொத்தம் 55 ஆட்டங்கள் நடைபெற்றன. அரசியல் காரணங்களுக்காக, இந்தியாவில் விளையாட வங்கதேசம் மறுத்ததால், அதற்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட்டது. வங்கதேசத்துக்கு ஆதரவாக முதலில் முரண்டுபிடித்த பாகிஸ்தான் பின்னர் பங்கேற்றது. அந்த அணி விளையாடிய ஆட்டங்கள் இலங்கையில் நடைபெற்றன.
குரூப் பிரிவு ஆட்டங்களில் புதிதாகக் களம் காணும் அணிகள் இடம்பெற்றதால் சுவாரஸ்யம் குறையும் என்று கருதிய நிலையில், இந்திய அணிக்கு அமெரிக்காவும், பாகிஸ்தான் அணிக்கு நெதர்லாந்தும், இங்கிலாந்துக்கு இத்தாலி, நேபாளம் ஆகிய அணிகளும் நெருக்கடி அளித்தன. இவற்றுக்கு எல்லாம் சிகரம் வைத்தது போல, எல்லா வகையான போட்டிகளிலும் ஜாம்பவான் அணியாகத் திகழும் ஆஸ்திரேலியாவை 146 ரன்களில் சுருட்டி 23 ரன்களில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது ஜிம்பாப்வே. இலங்கைக்கும் 6 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி அளித்து சூப்பர் 8 பிரிவுக்கு ஜிம்பாப்வே முன்னேறியது.
சர்வதேச அளவில் மிகவும் வலுவான அணியான தென்னாப்பிரிக்கா, 1998 சாம்பியன்ஸ் டிராபி, 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகியவை தவிர மற்ற போட்டிகளில் எல்லாம் அரை இறுதி அல்லது இறுதி ஆட்டத்தில் கோட்டை விடுவதே வாடிக்கையாகி வருகிறது. இப்போதும் அதுபோன்றே நிகழ்ந்துள்ளது.
அரை இறுதியில் இங்கிலாந்தை வெறும் 7 ரன்களில் வென்ற இந்திய அணிக்கு இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி பெரும் சவாலாக விளங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சஞ்சு சாம்சன் (89), அபிஷேக் சர்மா (52), இஷான் கிஷண் (54) ஆகியோரின் அதிரடியால் இந்தியா 255 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது.
நியூஸிலாந்து பேட்டர்களை திணறடித்து, 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி உலகின் சிறந்த பந்து வீச்சாளர் என்பதை பும்ரா மீண்டும் ஒரு முறை நிரூபித்தார். நியூஸிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றியது.
நியூஸிலாந்தும் கடந்த 11 ஆண்டுகளில் டெஸ்ட், 50 ஓவர், 20 ஓவர் போட்டிகளில் 6 முறை இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது. தென்னாப்பிரிக்கா போலவே, ஒரே ஒரு முறை டெஸ்ட் (2021) சாம்பியன்ஷிப் தவிர மற்ற ஐந்து முறையும் தோல்வியைத் தழுவி உள்ளது.
இந்திய அணியின் வெற்றிக்குப் பின்னால் பலரின் பங்களிப்பு உள்ளது. அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் எல்லா பேட்டர்களும் திணறியபோது கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழக்காமல் 84 ரன்கள் எடுத்து அதிர்ச்சித் தோல்வியில் இருந்து அணியைக் காத்தார்.
இந்தப் போட்டிக்குமுன் தடுமாறி வந்த சஞ்சு சாம்சன் (5 ஆட்டங்கள் 321 ரன்கள்), இஷான் கிஷண் (9 ஆட்டங்கள் 317 ரன்கள்) ஆகியோர் சிறப்பாக விளையாடினர். அரை இறுதி, இறுதி ஆட்டங்களில் வெற்றிக்கு அடித்தளமிட்ட சஞ்சு சாம்சன் தொடர் நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
போட்டி முழுவதும் எல்லா பந்துவீச்சாளர்களையும் பேட்டர்கள் இஷ்டம்போல சிதறடித்தபோதும், பும்ரா ஓவருக்கு சராசரியாக 6.21 ரன்கள் மட்டுமே கொடுத்து 14 விக்கெட்டுகளை கைப்பற்றி மாயாஜாலம் நிகழ்த்தினார்.
பந்துவீச்சில் வருண் சக்கரவர்த்தி (14 விக்.), அக்ஸர் படேல் (11 விக்.), தேவையான நேரங்களில் சிவம் டுபே பேட்டிங்கிலும், ஹார்திக் பாண்டியா பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் கைகொடுத்தனர்.
2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் டிராபி (50 ஓவர்). 2026-இல் டி20 உலகக் கோப்பை என இந்திய ஆடவர் அணி 'ஹாட்ரிக்' கோப்பைகளை வென்றுள்ளது.
2025-இல் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை (50 ஓவர்) போட்டி, கடந்த ஜனவரி பிப்ரவரியில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆடவர் உலகக் கோப்பை போட்டிகளிலும் இந்திய அணி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
2023 முதல் சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் 27 ஆட்டங்களில் இந்தியா பங்கேற்றுள்ளது. உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வி தவிர, ஓர் ஆட்டம் கைவிடப்பட்ட நிலையில் மற்ற 25 ஆட்டங்களில் இந்திய அணி வென்றுள்ளது.
சில நேரங்களில் டெஸ்ட் போட்டிகள், 50 ஓவர் போட்டிகளில் சற்று சறுக்கினாலும், 20 ஓவர் போட்டிகளில் தனக்கு நிகர் எந்த அணியும் இல்லை என்பதை இந்திய அணி மீண்டும் நிரூபித்திருக்கிறது.