ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் தான் இடம்பெறப் போவதில்லை என்பது முன்பே தெரியும் என இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் முதலில் தொடங்குகிறது. முதல் ஒருநாள் போட்டி வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி பெர்த்தில் நடைபெறுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை அண்மையில் பிசிசிஐ அறிவித்தது. இந்திய அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டார். ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவின் பெயர் இடம்பெறவில்லை. அணியில் ஜடேஜா இடம்பெறாதது பலருக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாதது தனக்கு ஆச்சரியமளிக்கவில்லை எனவும், அணியில் சேர்க்க முடியாத நிலையில் இருப்பதாக அணி நிர்வாகம் தன்னிடம் கூறியதாகவும் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது.
இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவடைந்த பிறகு ஜடேஜா பேசியதாவது: 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் விளையாடுவது என்னுடைய கைகளில் இல்லை. ஆனால், 2027 உலகக் கோப்பையில் நான் விளையாட விரும்புகிறேன். இந்த விஷயத்தில் அணி நிர்வாகம் என்ன நினைக்கிறது என்பது தெரியவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்காக இந்திய அணியை தேர்வு செய்தது போன்று வித்தியாசமாக யோசிக்கலாம்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் என்னுடைய பெயர் இடம்பெறாததன் பின்னணியில் கண்டிப்பாக ஏதேனும் காரணம் இருக்கும். இது குறித்து இந்திய அணி நிர்வாகம் தரப்பில் என்னிடம் பேசினார்கள். அதனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது, என்னுடைய பெயர் இடம்பெறாதது எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை. கேப்டன், அணித் தேர்வுக் குழுத் தலைவர் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் என்னிடம் பேசினார்கள். அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையும், எதற்காக என்னுடைய பெயர் இடம்பெறவில்லை என்பதையும் கூறினார்கள். அதனால், நான் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். ஆனால், எனக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது சிறப்பாக செயல்பட முயற்சி செய்வேன்.
2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாக நடைபெறும் ஒருநாள் போட்டிகளைப் பொருத்தே, உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்படும் என உணர்கிறேன். உலகக் கோப்பைத் தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தால், என்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்குவேன். கடந்த முறை உலகக் கோப்பைக்கு அருகில் சென்று கோப்பையை தவறவிட்டோம். அதனால், ஒருநாள் உலகக் கோப்பை என்பது இந்திய அணிக்கு இன்னும் முடிவடையாத வேலையாகவே உள்ளது என்றார்.
இதையும் படிக்க: டெம்பா பவுமா, கேசவ் மகாராஜ் அணியில் இல்லாதது பின்னடைவே, ஆனால்... மார்க்ரம் கூறுவதென்ன?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.