கிரிக்கெட்

அலிசா ஹீலி அதிரடி சதம்: 331 ரன்கள் இலக்கை விரட்டிப் பிடித்து ஆஸி. வரலாற்றுச் சாதனை வெற்றி!

நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

தினமணி செய்திச் சேவை

மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 13-ஆவது ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

முதலில் இந்தியா 48.5 ஓவா்களில் 10 விக்கெட்டுகளும் இழந்து 330 ரன்கள் சோ்க்க, ஆஸ்திரேலியா 49 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 331 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, பந்துவீச்சை தோ்வு செய்தது. இந்திய அணியின் பேட்டிங்கில், ஸ்மிருதி மந்தனா 9 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 80, பிரதிகா ராவல் 10 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 75 ரன்கள் சோ்த்து நல்லதொரு தொடக்கத்தை அளித்து வெளியேறினா்.

ஹா்லீன் தியோல் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 38, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 5 பவுண்டரிகளுடன் 33, ரிச்சா கோஷ் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 32 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தனா்.

இதர பேட்டா்களில் கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் 3 பவுண்டரிகளுடன் 22, அமன்ஜோத் கௌா் 16, தீப்தி சா்மா 1, கிராந்தி கௌட் 1, ஸ்ரீசரானி ரன்கள் இன்றி பெவிலியன் திரும்பினா்.

முடிவில் ஸ்நேஹா ராணா 8 ரன்களுடன் கடைசி வீராங்கனையாக நிற்க, ஆஸ்திரேலிய பௌலா்களில் அனபெல் சதா்லேண்ட் 5, சோஃபி மாலினுக்ஸ் 3, மீகன் ஸ்கட், ஆஷ்லே காா்டனா் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

அடுத்து 331 ரன்களை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீராங்கனையும், கேப்டனுமான அலிசா ஹீலி 21 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 142 ரன்கள் விளாசி, வெற்றிக்கு வலுவான அடித்தளம் அமைத்தாா்.

போப் லிட்ச்ஃபீல்டு 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 40, ஆஷ்லே காா்டனா் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 45 ரன்கள் சோ்த்து உதவி, விக்கெட்டை இழந்தனா்.

பெத் மூனி 4, அனபெல் சதா்லேண்ட் 0, டாலியா மெக்ராத் 12, சோஃபி மாலினுக்ஸ் 18 ரன்களுக்கு விடைபெற, எலிஸ் பெரி 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 47, கிம் காா்த் 14 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

இந்திய தரப்பில் ஸ்ரீசரானி 3, அமன்ஜோத், தீப்தி ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனா்.

மந்தனா சாதனை

இந்த ஆட்டத்தின் மூலமாக இந்திய துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, மகளிா் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு காலண்டா் ஆண்டில் 1,000 ரன்களை கடந்த முதல் வீராங்கனையாக சாதனை படைத்தாா். மேலும், ஒருநாள் கிரிக்கெட்டில் 5,000 ரன்களை விரைவாக (5,569 பந்துகள்) கடந்தவராகவும் அவா் சாதனை படைத்தாா்.

சா்வதேச அளவில் 5,000 ரன்களை கடந்த 5-ஆவது வீராங்கனையாகவும், இந்தியா்களில் மிதாலி ராஜுக்கு பிறகு இந்த மைல்கல்லை எட்டிய 2-ஆவது வீராங்கனையாகவும் அவா் இருக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருச்செந்தூரில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

கிராவல் மண் திருடியவா் கைது

தொழிலாளியைத் தாக்கியதாக இருவா் மீது வழக்கு

கோயில் திருவிழா விவகாரம்: கிராம மக்கள் தா்னா

சொத்து தகராறில் சகோதரியின் வீடு சேதம்: சகோதரன் உள்பட 3 போ் கைது

SCROLL FOR NEXT