ஆஷஸ் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாகுவார் என ஆஸ்திரேலிய தேர்வுக்குழு தலைவர் ஜியார்ஜ் பெய்லி கூறியுள்ளார்.
பாட் கம்மின்ஸுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், அவர் இல்லாவிட்டால் ஸ்டீவ் ஸ்மித்தான் கேப்டனாக செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளார்.
கம்மின்ஸுக்கு காயம்
ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி வரும் நவம்பரில் ஆஸ்திரேலியாவுக்குச் செல்கிறது.
ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் நவ.21ஆம் தேதி முதல் போட்டியும் ஜன.4ஆம் தேதி கடைசி போட்டியும் நடைபெற இருக்கின்றன.
பாட் கம்மின்ஸ் காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிராக ஒருநாள், டி20 தொடர்களில் இருந்து விலகியுள்ளார்.
முதல் போட்டியில் விளையாடுவதே கடினம் என அவரே கூறியிருந்தார்.
தொடரில் விளையாடுவாரா என்பதே கேள்விக்குறியாக உள்ள நிலையில், இது குறித்து ஆஸி. தேர்வுக்குழு தலைவர் ஜியார்ஜ் பெய்லி பேசியதாவது:
ஸ்மித் கேப்டன் என்பது வழக்கமான முடிவு
பாட் கம்மின்ஸ் விளையாடவில்லை என்றால் ஸ்மித்தான் கேப்டன். இதுதான் எங்களது வழக்கமான முடிவு. இதுவரை, இந்த முடிவு எங்களுக்கு சாதகமாகவே நடந்திருக்கிறது.
பாட் கம்மின்ஸ் பிளேயிங் லெவனில் இல்லாவிட்டாலும் அணியிலேதான் இருப்பார். குணமாகி வந்தாலும் அல்லது பயிற்சியில் ஈடுபட்டாலும் அணியுடன்தான் இருப்பார்.
தகவல் தொடர்பு, கேப்டன், துணைக் கேப்டன் என எப்போதும் ஒரேமாதிரிதான் இருக்கும்.
நியூ சௌத் வேல்ஸ் அணிக்காக ஸ்மித் இரண்டு போட்டிகளில் விளையாடுவார். பிறகு அணியில் இணைவார் எனக் கூறினார்.
ஆஷஸ், ஸ்மித் சாதனைகள்
இதுவரை நடந்த 73 ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா 34 முறையும் இங்கிலாந்து 32 முறையும் வென்றிருக்கின்றன.
ஸ்டீவ் ஸ்மித் 40 போட்டிகளில் டெஸ்ட் கேப்டனாக இருந்து 23 வெற்றிகள், 10 தோல்விகள், 7 சமனில் முடிந்துள்ளன.
வெற்றி சதவிகிதம் 57.50ஆக இருக்கிறது. பாட் கம்மின்ஸ் இல்லாத நிலையில் 6 போட்டிகளில் கேப்டனாக இருந்து 5-இல் வெற்றி பெற்றுள்ளார்.
ஸ்மித் தலைமையில் தெ.ஆ. அணிக்கு எதிராக பந்தை சேதப்படுத்திய காரணத்திற்காக ஸ்மித் கேப்டன் பதவியிலிருந்து விலக்கப்பட்டார். அதனால், 2 ஆண்டுகள் ஆஸி. அணியிலிருந்து நீக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.