மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 24-ஆவது ஆட்டத்தில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் வியாழக்கிழமை மோதுகின்றன.
அரையிறுதிக்காக இன்னும் ஒரு இடம் மட்டுமே காலியாக இருக்கும் நிலையில், இந்த ஆட்டத்தில் இந்தியா வென்றால், அந்த இடத்தை நேரடியாக உறுதி செய்யும். ஒருவேளை இதில் தோற்கும் நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆட்டங்களில் இங்கிலாந்து, நியூஸிலாந்தை வீழ்த்தி, இந்தியா வங்கதேசத்தை வென்றால், இந்தியாவுக்கு அரையிறுதி வாய்ப்பு கிடைக்கும்.
நியூஸிலாந்து அணியோ, இதிலும் வென்று, அடுத்த ஆட்டத்திலும் இங்கிலாந்தை வீழ்த்தினால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பு பெறும்.
இந்திய அணியை பொருத்தவரை, போட்டியை இரு அடுத்தடுத்த வெற்றிகளுடன் தொடங்கினாலும், அடுத்த 3 ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து போன்ற பலம் வாய்ந்த அணிகளிடம் தோற்றது.
இதில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டங்களில் இந்திய அணியின் பௌலிங்கில் இருக்கும் பின்னடைவு வெளிப்பட்ட நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங்கில் இருந்த தடுமாற்றம் தெரிந்தது.
எனவே, பேட்டிங், பௌலிங் என இரண்டுக்குமான தகுந்த உத்தியுடன் இந்த ஆட்டத்தை எதிா்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. மழை காரணமாக புதன்கிழமை மட்டுமே பயிற்சியில் ஈடுபட வாய்ப்பு கிடைத்ததால், அதனடிப்படையில் ஆடுகளத்தின் தன்மையை கணித்து இந்தியா தனது வியூகங்களை வகுக்க வேண்டியுள்ளது.
மறுபுறம், மழை காரணமாக கடைசி இரு ஆட்டங்களை இழந்திருக்கும் நியூஸிலாந்து, இந்த ஆட்டத்தின் வெற்றியுடன் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் முனைப்புடன் வருகிறது.
நேரம்: பிற்பகல் 3 மணி
நேரலை: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.