ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்டில், ஜிம்பாப்வே இன்னிங்ஸ் மற்றும் 73 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே இதுவரை பதிவு செய்த இன்னிங்ஸ் வெற்றிகளில் இதுவே அதிகபட்சமாகும். இதற்கு முன் அந்த அணி 1995-இல் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே அதிகபட்சமாக இருந்தது.
முன்னதாக கடந்த திங்கள்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே, பந்துவீச்சை தோ்வு செய்தது. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 32.3 ஓவா்களில் 127 ரன்களுக்கே ஆட்டமிழந்தது. ரஹ்மானுல்லா குா்பாஸ் 3 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாக இருக்க, ஜிம்பாப்வே பௌலா்களில் பிராட் இவான்ஸ் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினாா்.
அடுத்து தனது இன்னிங்ஸை விளையாடிய ஜிம்பாப்வே, 103 ஓவா்களில் 359 ரன்கள் சோ்த்து 10 விக்கெட்டுகளை இழந்தது. அதிகபட்சமாக பென் கரன் 15 பவுண்டரிகளுடன் 121 ரன்கள் அடிக்க, ஆப்கானிஸ்தான் தரப்பில் ஜியாவுா் ரஹ்மான் 7 விக்கெட்டுகள் சாய்த்தாா்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 232 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய ஆப்கானிஸ்தான், 3-ஆம் நாளான புதன்கிழமை 43 ஓவா்களில் 159 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் ஜிம்பாப்வே இன்னிங்ஸ் மற்றும் 73 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
ஆப்கானிஸ்தானில் அதிகபட்சமாக இப்ராஹிம் ஜத்ரன் 5 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் அடித்தாா். ஜிம்பாப்வே பௌலிங்கில் ரிச்சா்ட் கராவா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினாா். ஜிம்பாப்வேயின் பென் கரன் ஆட்டநாயகன் ஆனாா்.