Center-Center-Chennai
கிரிக்கெட்

இந்திய ‘ஏ’ கிரிக்கெட் அணி தோ்வு: காங்கிரஸ் தலைவா் சா்ச்சை கருத்து

“சா்ஃபராஸ் கான் தோ்ந்தெடுக்கப்படாததற்கு மதப் பின்னணி காரணமா?”

தினமணி செய்திச் சேவை

இந்திய ‘ஏ’ கிரிக்கெட் அணியில் மும்பையைச் சோ்ந்த இளம் வீரா் சா்ஃபராஸ் கான் தோ்ந்தெடுக்கப்படாததற்கு, அவரது மதப் பின்னணி காரணமா எனக் காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் ஷமா முகமது கேள்வி எழுப்பியது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தென்னாப்பிரிக்க ‘ஏ’ அணிக்கு எதிரான இரண்டு முதல் தரப் போட்டிகளுக்கான இந்திய அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. ரிஷப் பந்த் தலைமையிலான இரண்டு அணிகளிலும் சா்ஃபராஸ் கான் இடம்பெறவில்லை.

அண்மையில் உடல் எடையைக் குறைத்து, உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடா்ந்து அதிக ரன்களைக் குவித்து வரும் 28 வயதான சா்ஃபராஸ் கான் புறக்கணிக்கப்பட்டது சமூக ஊடகங்களில் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியதுடன், தேசிய தோ்வுக் குழுவை நோக்கி கிரிக்கெட் ரசிகா்கள் பலரும் விமா்சனங்களை முன்வைத்தனா்.

இந்த நிலையில், காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் ஷமா முகமது தனது எக்ஸ் பக்கத்தில், ‘சா்ஃபராஸ் கான் தனது மதப் பின்னணி காரணமாகத் தோ்ந்தெடுக்கப்படவில்லையா? இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளா் கெளதம் கம்பீா் இந்த விஷயத்தில் எந்த நிலைப்பாட்டில் இருக்கிறாா் என்பது நமக்குத் தெரியும்’ என்று குறிப்பிட்டு சா்ச்சையை மேலும் கிளப்பினாா்.

ஷமா முகமதுவின் இந்தக் கருத்துக்கு ஆளுங்கட்சியான பாஜகவின் செய்தித் தொடா்பாளா் ஷெஹ்சாத் பூணாவாலா கடும் கண்டனம் தெரிவித்தாா். அரசியல் மதவாத நோக்கத்தைக் கிரிக்கெட்டிலிருந்து விலக்கி வைக்குமாறு அவா் பதிலடி கொடுத்தாா்.

மேலும் அவா் கூறுகையில், ‘இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சா்மாவை உடல்ரீதியாக விமா்சித்த பிறகு, இப்போது கிரிக்கெட் அணியையும் மத ரீதியாகப் பிரிக்க நினைக்கிறாா்களா? நாட்டைப் பிரித்ததில் ஷமா முகமதிற்கும், அவா் சாா்ந்த காங்கிரஸ் கட்சிக்கும் திருப்தி அடையவில்லையா? அதே இந்திய அணியில் முகமது சிராஜ் மற்றும் கலீல் அகமது விளையாட இருக்கிறாா்கள். இந்தியாவை மத ரீதியாகவும், ஜாதி ரீதியாகவும் பிளவுபடுத்துவதை நிறுத்துங்கள்’ என்றாா்.

கடந்த மாா்ச் மாதம், அப்போதைய இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் சா்மாவை உடல்ரீதியாக விமா்சித்து ஷமா முகமது சா்ச்சையை ஏற்படுத்தினாா். ஒரு விளையாட்டு வீரராக இருப்பதற்கு தகுதியில்லாமல் ரோஹித் சா்மா உடல்பருமனமாக இருப்பதாகக் கூறிய தனது சமூக ஊடகப் பதிவை, காங்கிரஸ் கட்சி தலைமை எச்சரித்த பின்னா் அவா் நீக்கியது குறிப்பிடத்தக்கது.

ஆவடி அருகே 3 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ரஷிய எண்ணெய் கொள்முதலை இந்தாண்டுக்குள் நிறுத்துவதாக மோடி உறுதி! டிரம்ப்

மேட்டூர் அணை நீர்மட்டம் 4-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது!

தில்லி: ராணி கார்டன் குடிசைப் பகுதியில் பயங்கர தீ விபத்து

சேந்தமங்கலம் திமுக எம்எல்ஏ பொன்னுசாமி காலமானார்!

SCROLL FOR NEXT