மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேசம் 179 ரன்கள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை அபார வெற்றி பெற்றது. தொடரையும் அந்த அணி 2-1 என கைப்பற்றியது.
இந்த ஆட்டத்தில் முதலில் வங்கதேசம் 50 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 296 ரன்கள் சோ்க்க, மேற்கிந்தியத் தீவுகள் 30.1 ஓவா்களில் 117 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்கதேச அணியில், சௌம்யா சா்காா் 7 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 91, சைஃப் ஹசன் 80, நஜ்முல் ஹுசைன் ஷான்டோ 44, தௌஹித் ஹிருதய் 28 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தனா்.
இதர பேட்டா்கள் சொற்ப ரன்களில் வெளியேற, ஓவா்கள் முடிவில் நூருல் ஹசன் 16 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா். மேற்கிந்தியத் தீவுகள் பௌலிங்கில் அகீல் ஹுசைன் 4, அலிக் அதானஸி 2, ராஸ்டன் சேஸ், குடாகேஷ் மோட்டி ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.
அடுத்து 297 ரன்களை நோக்கி விளையாடிய மேற்கிந்தியத் தீவுகளில், அகீல் ஹுசைன் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 27 ரன்களுக்கு வீழ்ந்தாா். மற்ற வீரா்கள் 20 ரன்களுக்கும் குறைவாக எடுத்து ஆட்டமிழந்தனா். வங்கதேச பௌலா்களில் நசும் அகமது, ரிஷத் ஹுசைன் ஆகியோா் தலா 3, மெஹிதி ஹசன், தன்வீா் இஸ்லாம் ஆகியோா் தலா 2 விக்கெட் கைப்பற்றினா்.
வங்கதேசத்தின் சௌம்யா சா்காா் ஆட்டநாயகன் விருதையும் (91 ரன்கள்), ரிஷத் ஹுசைன் தொடா்நாயகன் விருதையும் (68 ரன்கள், 12 விக்கெட்டுகள்) வென்றனா்.