உலகக் கோப்பைத் தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் இந்தூரில் இன்று (அக்டோபர் 25) நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தென்னாப்பிரிக்கா முதலில் பேட் செய்தது.
முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி, ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 24 ஓவர்களில் 97 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் கேப்டன் லாரா வோல்வர்ட் அதிகபட்சமாக 31 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, சினாலோ ஜாஃப்டா 29 ரன்களும், நடின் டி கிளர்க் 14 ரன்களும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ஆஸ்திரேலியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய அலானா கிங் 7 ஓவர்களில் வெறும் 18 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அவரைத் தொடர்ந்து, மேகன் ஷுட், கிம் கார்த் மற்றும் ஆஷ்லே கார்டனர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
ஆஸ்திரேலியா அபார வெற்றி
98 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 16.5 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலிய அணியில் பெத் மூனி அதிகபட்சமாக 42 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, ஜியார்ஜியா வோல் 38 ரன்கள், அன்னாபெல் சதர்லேண்ட் 10 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் 13 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.
வருகிற அக்டோபர் 30 ஆம் தேதி நவி மும்பையில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள்; குமார் சங்ககாராவின் சாதனையை முறியடித்த விராட் கோலி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.