இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், சிட்னி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், ஸ்கேன் பரிசோதனையில் மண்ணீரலில் ரத்த கசிவு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் மோதிய கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி, சிட்னி மைதானத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியில், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இருப்பினும், 2-1 என்ற புள்ளிக் கணக்கில் ஆஸ்திரேலிய அணியிடம் தொடரை இழந்தது.
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை பின்னோக்கி ஓடிச் சென்று அற்புதமாக ஷ்ரேயாஸ் கேட்ச் பிடித்தார்.
இதில், ஷ்ரேயாஸின் இடது விலா எலும்பில் அடிபட்டது. உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பிசிசிஐ மருத்துவர்கள், சிட்னியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த நிலையில், அவரது உடல்நிலை குறித்து பிசிசிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷ்ரேயாஸுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டதில் அவரது மண்ணீரலில் ரத்த கசிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் குணமடைந்து வருவதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்திய மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரத்தப் போக்கு காரணமாக தொற்று பரவுவதை தடுக்க வேண்டியிருப்பதால் 7 நாள்கள் வரை அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக, அடுத்த சில வாரங்கள் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாட மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.