இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடியாக விளையாடும் அணுகுமுறையில் எந்த ஒரு மாற்றமும் இருக்காதென அந்த அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் அண்மையில் நிறைவடைந்த நிலையில், நாளை முதல் டி20 தொடர் தொடங்குகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டி20 தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடியாக விளையாடும் அணுகுமுறையில் எந்த ஒரு மாற்றமும் இருக்காதென அந்த அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: கடந்த இரண்டு டி20 உலகக் கோப்பைத் தொடர்கள் ஆஸ்திரேலிய அணிக்கு சிறப்பானதாக அமையவில்லை. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையை வெல்லும் அளவுக்கு சவால் மிகுந்த அணியாக நாங்கள் இருக்க வேண்டும். பேட்டிங்கில் நாங்கள் மிகவும் அதிரடியாக விளையாடி வருகிறோம். அதிரடியாக விளையாடுவதுதான் டி20 வடிவிலான கிரிக்கெட்டின் இயல்பு என நினைக்கிறேன்.
டி20 உலகக் கோப்பைத் தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது. உலகக் கோப்பைத் தொடரில் அதிரடியாகவே விளையாடவுள்ளோம். எல்லா முறையும் போட்டிகளின் முடிவுகள் எங்களுக்கு சாதகமாக இருக்காது. நாங்கள் தோல்விகளை சந்திக்க நேரிடும். ஆனால், நாங்கள் எப்படி விளையாட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம். அதிரடியாக விளையாடுவது எங்களுக்கான வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும்.
இந்திய அணி மிகவும் அற்புதமான அணி. இந்திய அணி மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கும் என நினைக்கிறேன். இரண்டு சிறந்த அணிகள் மோதிக்கொள்வதால், இந்த சவாலை எதிர்நோக்கி ஆவலோடு காத்திருக்கிறேன் என்றார்.
ஆஸ்திரேலிய அணி கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்றிருந்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஷ்ரேயாஸ் உடல்நிலை சீராக உள்ளது, ஆனால்...: சூர்ய குமார் விளக்கம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.