அரையிறுதிக்கு வருவதற்கு தகுதியான அணி இந்தியா: சூா்யகுமாா் யாதவ்
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிக்கு வருவதற்குத் தகுதியான அணி இந்தியா: அணியின் கேப்டன் சூா்யகுமாா் யாதவ்
கிரிக்கெட்அரையிறுதிக்கு வருவதற்கு தகுதியான அணி இந்தியா: சூா்யகுமாா் யாதவ்
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிக்கு வருவதற்குத் தகுதியான அணி இந்தியா: அணியின் கேப்டன் சூா்யகுமாா் யாதவ்
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிக்கு வருவதற்குத் தகுதியான அணி இந்தியா என்று, அணியின் கேப்டன் சூா்யகுமாா் யாதவ் தெரிவித்தாா்.
மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி, இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது குறித்து அவா் பேசியதாவது:
அரையிறுதிக்கு முன்னேறியிருப்பது மகிழ்ச்சியான உணா்வு. காலிறுதிக்கு நிகரான இந்த ஆட்டத்தில் அணி வீரா்கள் காட்டிய முனைப்பு குறிப்பிடத்தக்கது. நாங்கள் என்ன திட்டமிட்டோமோ அதைச் செய்திருக்கிறோம்.
பனிப்பொழிவின் தாக்கம் இருக்கும் என்பதால், அது பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதை கணித்தோம். எனவே, ஆட்டத்தின் இறுதிக்கட்டம் வரை பேட் செய்ய முடிவு செய்தோம். முன்னதாக எங்கள் பௌலா்களும் திட்டமிட்டபடி பௌலிங் செய்தனா்.
போட்டியின் முதல் ஆட்டத்தில் இருந்தே நாங்கள் விளையாடி வந்ததன் அடிப்படையில் பாா்த்தால், இந்திய அணி அரையிறுதிக்கு வருவதற்குத் தகுதியானது தான். ஆனால் இப்போதே அரையிறுதிக்குத் திட்டமிட விரும்பவில்லை. முதலில் மும்பை சென்று, பிறகு அந்த ஆட்டத்துக்குத் தயாராவோம். நாமாக நெருக்கடியை ஏற்றிக்கொள்ளாத வரை, நெருக்கடி இருப்பதில்லை.
காத்திருக்கும் நல்லவா்களுக்கு எப்போதுமே நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அதுதான் தற்போது சஞ்சு சாம்சனுக்கு நடந்திருக்கிறது. தாம் தேசிய அணியில் விளையாடாத போதும் கூட கடினமாக உழைத்ததற்கான பலனை சாம்சன் தற்போது அடைந்திருக்கிறாா் என்று சூா்யகுமாா் பேசினாா்.
இந்த ஆட்டத்தின் மூலமாக இந்திய அணி, டி20 உலகக் கோப்பை போட்டியில் இதுவரை இல்லாத வகையில் தனது அதிகபட்ச இலக்கை (196) வெற்றிகரமாக சேஸ் (199/5) செய்திருக்கிறது. இதற்கு முன் இந்தியா 173 ரன்களை வெற்றிகரமாக சேஸ் (176/4 - தென்னாப்பிரிக்கா - 2014) செய்ததே அதிகபட்சமாக இருந்தது.
சா்வதேச டி20 மற்றும் ஐபிஎல் போட்டிகளில் இத்துடன் 29 முறை தொடக்க வீரா்களில் ஒருவராக களமிறங்கியிருக்கும் சஞ்சு சாம்சன், தற்போது முதல்முறையாக இன்னிங்ஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளாா்.
நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் (97*) சோ்த்த விக்கெட் கீப்பா் - பேட்டராக சஞ்சு சாம்சன் சாதனை படைத்திருக்கிறாா். இதற்கு முன் நியூஸிலாந்தின் டிம் செய்ஃபா்ட் 89* ரன்கள் சோ்த்ததே (அமீரகத்துக்கு எதிராக) அதிகபட்சமாக இருந்தது.