இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார்.
ஒருநாள் போட்டிகளில் சிறந்த வீராங்கனைகளுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று (அக்டோபர் 28) வெளியிட்டுள்ளது. இந்த தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் துணைக் கேப்டனான ஸ்மிருதி மந்தனா தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார்.
நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் ஸ்மிருதி மந்தனா தொடக்கப் போட்டிகளில் சரியாக ரன்கள் குவிக்காவிட்டாலும், கடைசியாக நடைபெற்ற இரண்டு லீக் போட்டிகளிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 109 ரன்கள் மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 34 ரன்கள் எடுத்து அசத்தினார்.
இந்த இரண்டு போட்டிகளிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், 828 ரேட்டிங் புள்ளிகளுடன் ஸ்மிருதி மந்தனா பேட்டிங் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். 731 ரேட்டிங் புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் ஆஷ்லே கார்டனர் உள்ளார். லாரா வோல்வர்ட் (716 ரேட்டிங் புள்ளிகள்) , நாட் ஷிவர் பிரண்ட் (711 ரேட்டிங் புள்ளிகள்) மற்றும் பெத் மூனி (709 ரேட்டிங் புள்ளிகள்) ஆகியோர் முறையே மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் உள்ளனர்.
இங்கிலாந்து அணியின் எமி ஜோன்ஸ், ஆஸ்திரேலியாவின் அன்னாபெல் சதர்லேண்ட் மற்றும் இந்திய அணியின் இளம் வீராங்கனைகளில் ஒருவரான பிரதிகா ராவல் ஆகியோரும் பேட்டிங் தரவரிசையில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
பந்துவீச்சு தரவரிசையைப் பொருத்தவரையில் இங்கிலாந்து வீராங்கனை சோஃபி எக்கல்ஸ்டோன் 747 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்திய ஆஸ்திரேலிய வீராங்கனை அலானா கிங், 5 இடங்கள் முன்னேறி 2-வது இடம் பிடித்துள்ளார். ஆஷ்லே கார்டனர், மாரிஸேன் காப் மற்றும் தீப்தி சர்மா அடுத்த இடங்களில் உள்ளனர்.
ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ஆஷ்லே கார்டனர் முதலிடத்திலும், இந்திய வீராங்கனை தீப்தி சர்மா 5-வது இடத்திலும் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.