பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரும், ஃபினிஷருமான ஆசிஃப் அலி, அனைத்துவிதமான சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக திடீரென அறிவித்துள்ளார்.
33 வயதான ஆசிஃப் அலி, பாகிஸ்தான் அணிக்காக 58 டி20 போட்டிகளிலும், 21 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும், இவர் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது கிடையாது.
இதில், 2021 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைத் தொடரின் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 12 பந்துகளில் 24 ரன்கள் தேவையான நிலையில், 4 சிக்ஸர்கள் விளாசியதுடன் 7 பந்துகளில் 25 ரன்கள் குவித்து பாகிஸ்தான் அணியை வெற்றி பெற வைத்திருந்தார்.
இவர், கடைசியாக 2023 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடியிருந்தார். அதன்பின்னர், அணியில் தேர்வாகவில்லை.
நடுவரிசையில் விளையாடும் அதிரடி ஆட்டக்காரரான ஆசிஃப் அலி டி20 போட்டிகளில் 577 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 382 ரன்களும் குவித்துள்ளார்.
இதில், 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்தார்.
தனது ஓய்வு முடிவு குறித்து ஆசிஃப் அலி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒண்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “பாகிஸ்தான் அணியின் சீருடையை அணிவது மிகப் பெரிய கௌரவம். மேலும், கிரிக்கெட் திடலில் என்னுடைய நாட்டுக்காக சேவையாற்றியது பெருமையான அத்தியாயமாகும்.
உலகக் கோப்பைத் தொடரில் எனது மகள் இறந்தபோது, ஒவ்வொரு மகிழ்ச்சியிலும், துக்கத்திலும் என்னை ஆதரித்த நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.