ஆஸ்திரேலிய மண்ணில் ஜோ ரூட் சதமடிக்காவிட்டால் மெல்போர்ன் கிரிக்கெட் திடலை நிர்வாணமாக வலம் வருவேன் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் வருகிற நவம்பரில் தொடங்குகிறது. ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்து அணிக்கு மட்டுமின்றி, ஜோ ரூட்டுக்கும் மிக முக்கியமான தொடராகப் பார்க்கப்படுகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு சொந்த மண்ணில் நடைபெறாத ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி வென்றதில்லை. அதேபோல, கடந்த 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆஷஸ் தொடரை இதுவரை இங்கிலாந்து வென்றதில்லை.
டெஸ்ட் போட்டிகளில் ஜோ ரூட் மிகவும் சிறப்பான ஃபார்மில் இருந்தாலும், ஆஸ்திரேலிய மண்ணில் அவர் டெஸ்ட் போட்டிகளில் இதுவரை சதம் விளாசியதே கிடையாது. ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட், 35.68 சராசரியுடன் 892 ரன்கள் குவித்துள்ளார். அதில் 9 அரைசதங்கள் அடங்கும். ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 89 ஆகும்.
இந்த நிலையில், எதிர்வரும் ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய மண்ணில் ஜோ ரூட் சதமடிக்காவிட்டால் மெல்போர்ன் கிரிக்கெட் திடலை நிர்வாணமாக வலம் வருவேன் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாட்காஸ்ட் ஒன்றில் அவர் பேசியதாவது: ஆஷஸ் தொடரில் ஜோ ரூட் கண்டிப்பாக சதமடிப்பார். அவர் சதமடிக்கத் தவறினால், நான் மெல்போர்ன் கிரிக்கெட் திடலை நிர்வாணமாக வலம் வருவேன் என்றார்.
கடந்த 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட், 56.63 என்ற சராசரியுடன் 5720 ரன்கள் குவித்துள்ளார். அதில் 22 சதங்கள் மற்றும் 17 அரைசதங்கள் அடங்கும்.
டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக அதிக ரன்கள் குவித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை ஜோ ரூட் தன்வசம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: அடுத்த போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்தியா; கபில் தேவ் கொடுத்த முக்கிய அறிவுரை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.