இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்குவதைத் தவிர்த்துச் சென்ற செயலைக் குறிப்பிட்டு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் அளித்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தின் ஆலோசனை நடுவர் (மேட்ச் ரெஃப்ரி) ஆக செயல்பட்ட ஆன்டி பைக்ராப்ஃட், டாஸ் சுண்டும்போது இந்திய அணிக்குச் சாதகமாக செயல்படும் விதத்தில், இரு அணி கேப்டன்களும் கை குலுக்குவதை தவிர்க்கச் செய்தார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குற்றஞ்சாட்டியுள்ளது. இதையடுத்து, அவரை ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ரெஃப்ரிகள் குழுவிலிருந்து நீக்க கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, ஐசிசியிடம் இன்று(செப். 15) பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அளித்துள்ள புகாரில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது? என்பதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) தலைவருமான மோசின் நக்வி தமது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், ‘கிரிக்கெட் மாண்பைக் குறிக்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தை விதிகளையும், அதேபோல எம்சிசி சட்டங்களையும் மேட்ச் ரெஃப்ரி மீறிவிட்டார் என்பதைச் சுட்டிக்காட்டி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் ஐசிசியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஆசிய கோப்பையிலிருந்து மேட்ச் ரெஃப்ரியை உடனடியாக நீக்க கோரிக்கை முன்வைத்துள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.
ஒருவேளை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாவிட்டால், ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான புதன்கிழமை(செப். 17) நடைபெறும் ஆசிய கோப்பை ஆட்டத்திலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் ஆட்டங்களிலும் பாகிஸ்தான் பங்கேற்கப் போவதில்லை என்றும் தீர்மானித்திருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆட்டம் முடிவடைந்ததும், களத்தில் நின்ற இந்திய பேட்ஸ்மென்களான சூர்யகுமார் யாதவும் ஷிவம் துபேயும் நேராக இந்திய குழுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஓய்வறைக்கு விரைந்தனர். இதனால் அவர்கள் இருவருடனும், அதனைத் தொடர்ந்து பிற இந்திய வீரர்களுடன் கை குலுக்கி வாழ்த்து தெரிவிக்க காத்திருந்த பாகிஸ்தான் அணியினருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இதனால் கடும் அதிருப்தியில் உள்ள பாகிஸ்தான், ஆட்டத்துக்குப் பிந்தைய செய்தியாளர்கள் சந்திப்புக்கு அந்த அணியின் கேப்டன் சல்மான் அகாவை அனுப்பாமல் உடனடியாக எதிர்ப்பை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.