எந்த ஒரு அணியையும் குறைத்து மதிப்பிட மாட்டோம் என இலங்கை அணியின் கேப்டன் சமாரி அத்தப்பத்து தெரிவித்துள்ளார்.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. போட்டிகள் அனைத்தும் இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படுகின்றன. செப்டம்பர் 30 ஆம் தேதி நடைபெறும் தொடரின் முதல் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிக் கொள்கின்றன.
இந்த நிலையில், ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் சொந்த மண்ணில் நடைபெறுவது இலங்கை அணிக்கு மிகவும் சாதகமாக இருக்கும் என அந்த அணியின் கேப்டன் சமாரி அத்தப்பத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: உலகக் கோப்பை தொடரின் போட்டிகள் அனைத்தும் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுவதால், இலங்கை அணிக்கு மிகவும் சாதகமான சூழலே உள்ளது. துணைக் கண்டத்தில் உள்ள ஆடுகளங்களின் தன்மையை நாங்கள் நன்கு அறிவோம். எங்களது அணியில் மூத்த வீராங்கனைகள் மற்றும் இளம் வீராங்கனைகள் என இருதரப்பும் சமபலத்துடன் உள்ளோம். இந்த உலகக் கோப்பையை வெல்வதற்கு எங்களுக்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
உலகக் கோப்பை தொடரில் விளையாடவுள்ள அனைத்து அணிகளும் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர். அதனால், எந்த ஒரு அணியையையும் நாங்கள் குறைத்து மதிப்பிட மாட்டோம். எதிரணி யாராக இருந்தாலும், அவர்களுக்கு சம மரியாதை அளித்து எங்களது சிறந்த ஆட்டத்தை ஒவ்வொரு போட்டியிலும் வெளிப்படுத்துவோம். சொந்த மண்ணில் சில போட்டிகளில் விளையாடவுள்ளது மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. எங்களது ரசிகர்களுக்கு முன் விளையாடவுள்ளது எங்களுக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய வாய்ப்பு. கடந்த சில ஆண்டுகளாக இலங்கை அணி சிறப்பாக முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதை என்னால் உறுதியாக கூற முடியும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.