மேற்கிந்தியத் தீவுகள் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப் காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணியினர் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளனர். இந்தத் தொடர் வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது.
இந்தத் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், 15 பேர் கொண்ட இந்திய அணியும் நேற்று(செப்.26) அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப் காயம் காரணமாக விலகியுள்ளார். இதனால், அந்த அணி பலத்த பின்னடைவைச் சந்தித்துள்ளது.
இதனால், அவருக்குப் பதிலாக 22 வயதான ஜோஹன் லெய்ன் முதல் முறையாக மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு விளையாட அழைக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி, “வங்கதேசத்துக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்காக அக்டோபர் 18 முன்னர், ஷமர் ஜோசப்பின் காயம் பற்றி மறுமதிப்பீடு செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு அறிமுகமான ஷமர் ஜோசப் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிங்க் டெஸ்ட் போட்டியின் போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நிகழாண்டில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் அருமையாக விளையாடி 3 போட்டிகளில் 17 விக்கெட் வீழ்த்தியிருந்தார்.
மொத்தமாக 11 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளயாடி 51 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஷமர் ஜோசப், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 9 போட்டிகளில் விளையாடி 33 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.
பார்படோஸைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான ஜோஹன் லெய்ன், 19 முதல்தரப் போட்டிகளில் விளையாடி 495 ரன்களும், 66 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். அதில், 4 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.