ஆசியக் கோப்பைத் தொடரில் 41 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவுடன் முதல்முறையாக இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி விளையாடுவது குறித்து பாகிஸ்தான் பயிற்சியாளர் மைக் ஹெசன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேச அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன.
இந்திய அணி இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றுவிட்ட நிலையில், நேற்றைய போட்டியில் இரண்டாவது அணியாக வங்கதேசத்துடன் மோதிய பாகிஸ்தான் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றது.
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஏற்கனவே செப்.14 ஆம் தேதி லீக் சுற்றிலும், அதனைத் தொடர்ந்து செப்.21 ஆம் தேதி சூப்பர் 4 சுற்றிலும் மோதியிருந்தன.
இரண்டு போட்டிகளிலும் முறையே இந்திய அணி 7 மற்றும் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தது.
மூன்றாவது முறையாக இறுதிப்போட்டியில் வருகிற செப்.28 ஆம் தேதி இவ்விரு அணிகளும் கோப்பைக்கான போட்டியில் விளையாடவுள்ளன.
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெசன் கூறும்போது, “நாங்கள் 14 ஆம் தேதியும், 21 ஆம் தேதியும் விளையாடியதை நன்றாக அறிவோம். ஆனால், இறுதிப்போட்டியில் வெற்றிபெற வேண்டியது மிகவும் முக்கியமானது.
நாங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்கிறோம். இந்த வாய்ப்புக்கு நாங்கள் தகுதியானவர்கள். அதனை சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள முயற்சிப்போம்.
இதுவரை நடந்த அனைத்துப் போட்டிகளிலும் கோப்பையை வெல்ல கடுமையாக முயற்சித்ததாகவே கருதுகிறேன். நாங்கள் கிரிக்கெட்டில் மட்டுமே முழுமையாக கவனம் செலுத்துகிறோம்” எனத் தெரிவித்தார்.
மேலும், பாகிஸ்தான் வீரர்கள் ஷாகிப்ஸாதா ஃபர்ஹான் மற்றும் ஹாரிஸ் ரௌப் பற்றிய கேள்விகளுக்குப் பதிலளித்த மைக், “நாங்கள் விளையாட்டின் பக்கத்தில் இருந்து பார்க்க விரும்புகிறோம். முக்கியமான ஆட்டத்தில் வீரர்கள் ஆர்வ மிகுதியுடன் இருப்பார்கள்.
என்னைவிட உங்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். ஒரு சிறந்த விளையாட்டைக் காண்பிப்பதுதான் எங்கள் வேலை” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.