கிரிக்கெட் ரசிகர்களின் ஆவலுக்கு தீனி போட, டி20 உலக கோப்பை தொடரின் 10-ஆவது சீசன் சனிக்கிழமை (பிப். 7) கோலாகலமாகத் தொடங்கியது. மார்ச் 8 வரை நடைபெறும் இந்தத் தொடரில், மொத்தம் 20 அணிகள் குரூப் ஏ முதல் டி வரை ஒரு குரூப்புக்கு தலா 5 அணிகள் வீதம் பிரிக்கப்பட்டு போட்டி நடைபெறுகிறது.
தொடக்க நாளில், குரூப் ஏ பிரிவிலுள்ள உலக சாம்பியன் இந்தியாவை எதிர்த்து கற்றுக்குட்டி அணியான அமெரிக்கா (யுஎஸ்ஏ) மும்பையின் வான்கடே திடலில் களம் கண்டது. டாஸ் வென்ற அமெரிக்கா, முதலில் இந்தியாவைப் பேட்டிங் செய்ய பணிக்க, இந்திய அணியிலிருந்து, இஷான் கிஷனும் அபிஷேக் சர்மாவும் க்ரீஸுக்குச் சென்றனர்.
ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலேயே அபிஷேக் சர்மா டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். ஆனால், அதிர்ச்சி என்பது இதுவல்ல இனிமேல்தான் காத்திருகிறது என்பது போல, பவர்-ப்ளேவின் கடைசி ஓவரில், இந்திய அணியின் 3 முக்கிய விக்கெட்கள் சரிந்தன. இஷான் கிஷன் (20), திலக் வர்மா (25), ஷிவம் துபே (0) சொற்ப ரன்களில் நடையைக்கட்டினர். இதனால் இந்திய அணி முதல் 6 ஓவர்களுக்குள் 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
இதைத்தொடர்ந்து, நடுவரிசையில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை தவிர்த்து, நிதானமாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டார். அவர் அரைசதம் கடந்ததுடன் அமெரிக்க அணி சேஸிங் செய்ய 162 என்ற சவாலான இலக்கை எட்டவும் உதவினார். அவர் 49 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.
அமெரிக்கா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஷாட்லி வான் 4 விக்கெட்டுகளையும், ஹர்மீத் சிங் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். அலி கான் மற்றும் முகமது மோஹ்சின் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
அடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி அமெரிக்க அணி விளையாடியது. ஆனால், அந்த அணியில் நடுவரிசையில் களமிறங்கிய மிலிந்த் குமார் (34) மற்றும் சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி, சுபம் ரஞ்சனே தலா 37 ரன்கள், தவிர வேறு எந்த வீரரும் பெரிதாகச் சோபிக்கவிலை.
இதனால் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 132 ரன்கள் மட்டுமே திரட்டி இந்தியாவிடம் பரிதாபமாக வீழ்ந்தது.
இந்திய அணியில், அர்ஷ்தீப் சிங் சிறந்த எகானமியில் 4.50 பந்துவீசி அமெரிக்க அணியை ரன் திரட்ட போராடச் செய்தார். அவர் 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.