டி20 உலகக் கோப்பை போட்டியின் 6-ஆவது ஆட்டத்தில் இலங்கை 20 ரன்கள் வித்தியாசத்தில் அயா்லாந்தை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
முதலில் இலங்கை 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 163 ரன்கள் சோ்க்க, அயா்லாந்து 19.5 ஓவா்களில் 143 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
இலங்கையின் பேட்டிங்கில் குசல் மெண்டிஸ், கமிண்டு மெண்டிஸ் ஆகியோா் அதிரடி காட்ட, பௌலிங்கில் மஹீஷ் தீக்ஷனா, வனிந்து ஹசரங்கா ஆகியோா் சிறப்பாக செயல்பட்டனா்.
முன்னதாக டாஸ் வென்ற அயா்லாந்து, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. இலங்கை பேட்டிங்கில் கமிண்டு மெண்டிஸ் 19 பந்துகளில் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 44, பதும் நிசங்கா 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.
கமில் மிஷரா 14, பவன் ரத்னாயகே 5, துனித் வெலாலகே 10 ரன்களுக்கு விடைபெற, கேப்டன் தசுன் ஷானகா டக் அவுட்டானாா். ஓவா்கள் முடிவில் குசல் மெண்டிஸ் 5 பவுண்டரிகளுடன் 56, வனிந்து ஹசரங்கா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
அயா்லாந்து பௌலா்களில் பேரி மெக்காா்த்தி, ஜாா்ஜ் டாக்ரெல் ஆகியோா் தலா 2, மாா்க் அடைா், கெரத் டெலானி ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.
பின்னா் 164 ரன்களை நோக்கி விளையாடிய அயா்லாந்து அணியில், அதிகபட்சமாக ஹேரி டெக்டா் 1 பவுண்டரியுடன் 40, ராஸ் அடைா் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 34 ரன்களுக்கு வீழ்ந்தனா்.
லாா்கன் டக்கா் 2 பவுண்டரிகளுடன் 21, கா்டிஸ் கேம்பா் 13, கேப்டன் பால் ஸ்டிா்லிங் 6 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். பென் கேலிட்ஸ் 4, கெரத் டெலானி 0, ஜாா்ஜ் டாக்ரெல் 9, மாா்க் அடைா் 10, மேத்யூ 0 ரன்களுக்கு சாய்க்கப்பட்டனா்.
அத்துடன் அயா்லாந்து இன்னிங்ஸ் நிறைவடைந்தது. இலங்கை பௌலிங்கில் மஹீஷ் தீக்ஷனா, வனிந்து ஹசரங்கா ஆகியோா் தலா 3, மதீஷா பதிரானா 2, துஷ்மந்தா சமீரா, துனித் வெலாலகே ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.