முகப்பு
கிரிக்கெட்

பந்துவீச்சு, பேட்டிங்கில் அசத்திய பாஸ் டி லீட்; நமீபியாவை வீழ்த்திய நெதர்லாந்து!

டி20 உலகக் கோப்பைத் தொடரில் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Updated On : 10 பிப்ரவரி, 2026 at 11:00 AM
அரைசதம் விளாசிய பாஸ் டி லீட் - படம் | AP
பகிர்:

டி20 உலகக் கோப்பைத் தொடரில் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் தில்லியில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் நெதர்லாந்து மற்றும் நமீபியா அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய நமீபியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்தது.

அந்த அணியில் ஜேன் நிக்கோல் லாஃப்டி ஈட்டன் 38 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஜேன் ஃபிரைலிங்க் 30 ரன்களும், ஜேஜே ஸ்மித் 22 ரன்களும் எடுத்தனர். கேப்டன் எராஸ்மஸ் 18 ரன்கள் எடுத்தார்.

நெதர்லாந்து தரப்பில் லோகன் வான் பீக் மற்றும் பாஸ் டி லீட் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஃபிரெட் கிளாசன் மற்றும் ஆர்யன் தத் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

பாஸ் டி லீட் அதிரடி; நெதர்லாந்து வெற்றி!

157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நெதர்லாந்து, 18 ஓவர்களில் இலக்கை எட்டி நமீபியாவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

அந்த அணியில் அதிகபட்சமாக பாஸ் டி லீட் அதிரடியாக 48 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, காலின் அக்கர்மேன் 32 ரன்களும், மைக்கேல் லெவிட் 28 ரன்களும் எடுத்தனர்.

நமீபியா தரப்பில் பெர்னார்டு, ரூபன் மற்றும் ஜேன் நிக்கோல் லாஃப்டி ஈட்டன் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்ட பாஸ் டி லீடுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள நெதர்லாந்து அணி ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியுடன் குரூப் ஏ பிரிவில் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

The Netherlands won the T20 World Cup match against Namibia by 7 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.