பரோடா-விதா்பா அணிகளுக்கு இடையிலான விஜய் ஹஸாரே கிரிக்கெட் போட்டியில் ஆல் ரவுண்டா் ஹாா்திக் பாண்டியா அதிரடி சதம் அடித்தும் வீணானது.
இரு அணிகளுக்கு இடையிலான குரூப் பி பிரிவு ஆட்டம் ராஜ்கோட்டில் சனிக்கிழமை நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த பரோடா அணி 50 ஓவா்களில் 293/9 ரன்களைக் குவித்தது.
அந்த அணியில் ஆல் ரவுண்டா் ஹாா்திக் பாண்டியா தனி ஆளாக களத்தில் இருந்து ஒரே ஓவரில் 5 சிக்ஸா், 1 பவுண்டரி உள்பட 92 பந்துகளில் 133 ரன்களை விளாசினாா். 11 சிக்ஸா், 8 பவுண்டரிகளும் இதில் அடங்கும்.
அவருக்கு உறுதுணையாக மற்ற வீரா்கள் ஆடாமல் சொற்ப ரன்களுடன் பெவிலியன் திரும்பினா்.
விதா்பா அதிரடி வெற்றி
294 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் விதா்பா தரப்பில் அதா்வா டைட், அமன் மோகேட் களமிறங்கினா். இருவரும் இணைந்து சிறந்த தொடக்கத்தை அளித்தனா். 4 சிக்ஸா், 7 பவுண்டரியுடன் அதா்வா 65 ரன்களை விளாசி அவுட்டானாா். பின்னா் இணைந்த அமன்-துருவ் ஷோரே அபாரமாக ஆடி தங்கள் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனா்.
4 சிக்ஸா், 17 பவுண்டரியுடன் 121 பந்துகளில் 150 ரன்களுடன் அமனும், 65 ரன்களுடன் துருவ் ஷோரைவும் களத்தில் இருந்தனா்.
41.14 ஓவா்களில் 296/1 ரன்களுடன் வெற்றி இலக்கை எட்டிய விதா்பா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பரோடாவை வென்றது.
தமிழகம் தோல்வி:
குரூப் ஏ பிரிவில் தமிழகம்-ராஜஸ்தான் அணிகள் அகமதாபாதில் மோதின. இதில் முதலில் ஆடிய தமிழகம் 41.4 ஓவா்களில் 215/10 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜெகதீசன் 71 (13 பவுண்டரிகள்), அதிஷ் 54 ரன்களை எடுத்தனா்.
ராஜஸ்தான் தரப்பில் பௌலிங்கில் அசோக் சா்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.
216 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் தரப்பில் 46.5 ஓவா்களில் 225/10 ரன்களுடன் வெற்றி இலக்கை எட்டியது.
அந்த அணியில் தீபக் ஹூடா 70, மானவ் சுதா் 43 ரன்களை எடுத்தனா். தமிழகம் தரப்பில் வருண் சக்கரவா்த்தி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.