வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் தமிம் இக்பாலை இந்திய உளவாளி என வங்கதேச கிரிக்கெட் வாரிய மூத்த அதிகாரி விமர்சித்துள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 வரை நடைபெறுகிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அனைத்து அணிகளையும் அந்தெந்த நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் கிட்டத்தட்ட அறிவித்துவிட்டன.
வங்கதேசத்தில் இந்துக்கள் மீதாக தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக கூறப்பட்ட நிலையில், அண்மையில் பிசிசிஐ வழிகாட்டுதல் ஒன்றை வெளியிட்டது. அந்த வழிகாட்டுதலின்படி, ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடுவதாக இருந்த வங்கதேச வேகப் பந்துவீச்சாளர் முஸ்தஃபிசூர் ரஹ்மான் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து முஸ்தஃபிசூர் ரஹ்மான் விடுவிக்கப்பட்ட சில நாள்களுக்குப் பிறகு, இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை புறக்கணிக்க வங்கதேச கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கு முன்பாக, ஐபிஎல் தொடர் வங்கதேசத்தில் ஒளிபரப்பப் படாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விவகாரத்தில் வங்கதேச கிரிக்கெட் வாரியம் உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்க வேண்டாமென அந்த அணியின் முன்னாள் கேப்டன் தமிம் இக்பால் வலியுறுத்தினார்.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விவகாரத்தில் வங்கதேச கிரிக்கெட் வாரியம் உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்க வேண்டாமென வலியுறுத்தியிருந்த தமிம் இக்பாலை இந்திய உளவாளி என வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் நிதிக்குழுத் தலைவர் நஸ்முல் இஸ்லாம் விமர்சித்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: இந்தியாவின் மற்றுமொரு உளவாளியாக மாறியுள்ள ஒருவரை (தமிம் இக்பால்) வங்கதேச மக்கள் இன்று பார்க்கின்றனர் எனப் பதிவிட்டுள்ளார்.
அவரது இந்தப் பதிவுக்கு டஸ்கின் அகமது, மோமினுல் ஹேக் மற்றும் தைஜுல் இஸ்லாம் உள்பட வங்கதேச அணியின் வீரர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் நலச் சங்கமும் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
தனது கண்டனத்தில் வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் நலச் சங்கம் தெரிவித்திருப்பதாவது: வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் தமிம் இக்பால் பற்றி வங்கதேச கிரிக்கெட் வாரிய இயக்குநர் நஸ்முல் இல்ஸாம் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்துள்ளது எங்களது கவனத்துக்கு வந்துள்ளது. அவரது இந்த கருத்து எங்களுக்கு அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 16 ஆண்டுகளாக வங்கதேச அணிக்காக மிகவும் வெற்றிகரமான தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வரலாறு படைத்துள்ள தமிம் இக்பால் மீது இதுபோன்ற விமர்சனத்தை முன்வைத்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிம் இக்பால் மட்டுமின்றி, வேறு எந்தவொரு வீரர் மீதும் இப்படிப்பட்ட விமர்சனங்களை முன்வைத்தால் எங்களால் அதனை ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவே முடியாது. நஸ்முல் இஸ்லாமின் சர்ச்சைக்குரிய கருத்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அவதிமதிப்பதாக உள்ளது. இது தொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக்க நாங்கள் வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவரிடம் முறையிட்டுள்ளோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேச வீரர் டஸ்கின் அகமது கூறியதாவது: வங்கதேசத்தின் வாழ்க்கையாக கிரிக்கெட் உள்ளது. முன்னாள் கேப்டன் தமிம் இக்பால் மீது வைக்கப்பட்டுள்ள விமர்சனம் மிகவும் கண்டிக்கத்தக்கது. இது போன்ற கருத்துகள் வங்கதேச கிரிக்கெட்டினை வளர்க்க உதவாது. இந்த விவகாரம் தொடர்பாக அதற்குரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன் என்றார்.
வங்கதேச வீரர் மற்றும் முன்னாள் கேப்டன் மோமினுல் ஹேக் கூறியதாவது: தமிம் இக்பால் மீதான இந்த சர்ச்சைக்குரிய விமர்சனம் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. மூத்த அதிகாரி ஒருவரின் இதுபோன்ற செயல், வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் பொறுப்புடன் நேரடியாக மோதுவாக உள்ளது. மூத்த வீரருக்கு உரிய மரியாதையை கொடுக்காமல், தமிம் இக்பால் பொது வெளியில் அவமானப்படுத்தப்பட்டுள்ளார். மூத்த அதிகாரி ஒருவர் எங்கு எப்படி பேச வேண்டும் என்ற பொறுப்பின்றி நடந்துகொண்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன் என்றார்.
வங்கதேச அணிக்காக தமிம் இக்பால் 70 டெஸ்ட், 243 ஒருநாள் மற்றும் 78 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.