லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் வரலாறு படைத்துள்ளார்.
விஜய் ஹசாரே தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் மகாராஷ்டிர அணிக்காக விளையாடி வருகிறார். இந்த தொடரில் கோவாவுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் மகாராஷ்டிரம் த்ரில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய மகாராஷ்டிர அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சதம் விளாசி அசத்தினார். அவர் 131 பந்துகளில் 134 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
வரலாறு படைத்த ருதுராஜ் கெய்க்வாட்
கோவாவுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் சதம் விளாசியதன் மூலம், லிஸ்ட் ஏ கிரிக்கெட் வரலாற்றில் அதிக சராசரியுடன் ரன்கள் குவித்து ருதுராஜ் கெய்க்வாட் வரலாறு படைத்தார்.
இதற்கு முன்பாக, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் பெவன் 57.86 என்ற சராசரியுடன் ரன்கள் குவித்திருந்ததே லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் சாதனையாக இருந்தது. இந்த சாதனையை தற்போது ருதுராஜ் கெய்க்வாட் முறியடித்துள்ளார். அவர் 58.83 என்ற சராசரியுடன் ரன்கள் குவித்துள்ளார்.
அதே போல, லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ருதுராஜ் கெய்க்வாட் 5000 ரன்களைக் கடந்தும் சாதனை படைத்துள்ளார். மேலும், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேகமாக 20 சதங்கள் விளாசிய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். வெறும் 99 இன்னிங்ஸ்களில் இந்த இரண்டு சாதனைகளையும் அவர் படைத்துள்ளார்.
விஜய் ஹசாரே தொடரில் சிறப்பாக விளையாடி வரும் ருதுராஜ் கெய்க்வாட், அண்மையில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.