ஆஸ்திரேலிய மகளிரணி கேப்டன் அலீசா ஹீலி அனைத்துவிதமான சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இந்திய மகளிரணி மார்ச்சில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் பெர்த்தில் நடைபெறும் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் விளையாடவிருக்கிறது.
இந்த நிலையில், இந்தப் போட்டிக்குத் தலைமை வகிக்கும் ஆஸ்திரேலிய மகளிரணி கேப்டன் அலீசா ஹீலி, இந்தத் தொடருடன் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
35 வயதான அவர், இந்தாண்டு இறுதியில் பிரிட்டனில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைத் தொடரில் விளையாட மாட்டார் என்பதால் அவர் இந்தியாவுடனான டி20 தொடரில் பங்கேற்க மாட்டார்.
விக்கெட் கீப்பர் பேட்டரான அலீசா ஹீலி, ஆஸ்திரேலிய அணிக்காகத் தலைமை வகித்து ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பையில் இரண்டு முறையும், டி20-யில் ஆறு முறையும் என மொத்தம் 8 ஐசிசி கோப்பைகளை வென்ற அணிகளில் இடம்பெற்ற சாதனையையும் படைத்துள்ளார்.
2010 ஆம் ஆண்டு தனது 19 வயதில் ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமான அலீசா ஹீலி, 10 டெஸ்ட் (489 ரன்கள்), 123 ஒருநாள் (3563 ரன்கள்), 162 சர்வதேச டி20 போட்டிகளிலும் (3054 ரன்கள்) விளையாடியுள்ளார்.
விக்கெட் கீப்பிங்கில் 275 பேரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். மெக் லென்னிங்கில் கீழ் துணை கேப்டனாக இருந்த இவர், 2023 ஆம் ஆண்டு முழுநேர கேப்டனாக பணியாற்றினார்.
சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோற்ற ஆஸ்திரேலிய அணி அரையிறுதியுடன் வெளியேறியது. அப்போது போட்டியின் முடிவில், ஓய்வு குறித்து அலீசா ஹீலி சூசகமாகத் தெரிவித்திருந்தார். இதனால், மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் விற்பனை ஆகாமல் போனார் அலீசா ஹீலி.
அலீசா ஹீலியின் கணவர் மிட்செல் ஸ்டார்க்கும் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி வருகிறார். இவரும் சமீபத்தில் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.