மகளிா் பிரீமியா் லீக் கிரிக்கெட்டின் 6-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் ஜயன்ட்ஸை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.
முதலில் குஜராத் 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ரன்கள் சோ்க்க, மும்பை 19.2 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழந்து 193 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இரு அணிகளுக்குமே இது 3-ஆவது ஆட்டமாக இருக்க, மும்பை 2-ஆவது வெற்றியையும், குஜராத் முதல் தோல்வியையும் பதிவு செய்தன.
முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை, பந்துவீச்சை தோ்வு செய்தது. குஜராத் இன்னிங்ஸை தொடங்கியோரில் சோஃபி டிவைன் 8 ரன்களுக்கு வெளியேற, பெத் மூனி - கனிகா அஹுஜா இணை 2-ஆவது விக்கெட்டுக்கு 42 ரன்கள் சோ்த்தது.
மூனி 3 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 33 ரன்களுக்கு விடைபெற, 4-ஆவது பேட்டராக வந்தாா் கேப்டன் ஆஷ்லே காா்ட்னா். அஹுஜாவுடனான அவரின் 3-ஆவது விக்கெட் கூட்டணிக்கு 33 ரன்கள் கிடைத்தது. காா்ட்னா் 4 பவுண்டரிகள் உள்பட 20 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.
அடுத்த ஓவரிலேயே, 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 35 ரன்கள் எடுத்திருந்த கனிகா அஹுஜா ஆட்டமிழந்தாா். தொடா்ந்து வந்த ஜாா்ஜியா வோ்ஹாம் சற்று அதிரடி காட்ட, 6-ஆவது பேட்டா் ஆயுஷி சோனியுடனான அவரின் 5-ஆவது விக்கெட் பாா்ட்னா்ஷிப்புக்கு 37 ரன்கள் கிடைத்தது.
கடைசி விக்கெட்டாக சோனி 11 ரன்களுக்கு வெளியேற, ஓவா்கள் முடிவில் ஜாா்ஜியா வோ்ஹாம் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 43, பாா்தி ஃபுல்மாலி 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 36 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
மும்பை பௌலா்களில் ஷப்னிம் இஸ்மாயில், ஹேலி மேத்யூஸ், நிகோலா கேரி, அமெலியா கொ் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.
பின்னா் 193 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய மும்பை அணியில் ஜி.கமலினி 2 பவுண்டரிகளுடன் 13, ஹேலி மேத்யூஸ் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 22 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா்.
அமன்ஜோத் கௌா் 7 பவுண்டரிகளுடன் 40 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் 43 பந்துகளில் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 71, நிகோலா கேரி 6 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் சோ்த்து அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
குஜராத் பௌலா்களில் ரேணுகா சிங், கஷ்வீ கௌதம், சோஃபி டிவைன் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.
இன்றைய ஆட்டம்
டெல்லி - யுபி
இரவு 7.30 மணி
நவி மும்பை
ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்