பத்தொன்பது வயதுக்கு உள்பட்ட (யு-19) ஆடவருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான குரூப் - ஏ பிரிவின் முதல் ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
ஜிம்பாப்வேயின் புலவயோ நகரில் வியாழக்கிழமை (ஜன. 15) நடைபெற்ற ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணி 107 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி வீரர் ஹெனில் படேல் 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களைக் கைப்பற்றி அசத்தினார்.
இந்த நிலையில், மழை காரணமாக ஆட்டத்தின் ஓவர்கள் 37 ஓவர்களாக குறைக்கப்பட்டன. இதையடுத்து டக்வெர்த் லீவிஸ் (டிஎல்எஸ்) முறையில் இந்தியா வெற்றி பெற 96 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.
எளிய இலக்கை விரட்டிய இந்திய அணி 17.2 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஹெனில் படேல் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இந்த 16-ஆவது உலகக் கோப்பை போட்டியில், மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. குரூப் "ஏ'-வில் இந்தியா, வங்கதேசம், நியூஸிலாந்து, அமெரிக்கா உள்ளன. ஒவ்வொரு குரூப்பிலும் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகள், சூப்பர் 6 கட்டத்துக்கு வரும்.
அதில் அந்த 12 அணிகளும் தலா 6 அணிகளாக "குரூப் 1', "குரூப் 2' என பிரிக்கப்படும். அந்த அணிகள் தங்களுக்குள்ளாக மோத, முடிவில் இரு குரூப்களிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இறுதி ஆட்டம் பிப்ரவரி 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.