நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இஷான் கிஷன் 3-வது வீரராக களமிறங்குவார் என இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று நியூசிலாந்து அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நாளை (ஜனவரி 21) தொடங்குகிறது.
இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இஷான் கிஷன் மூன்றாவது வீரராக களமிறங்குவார் என கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கு முன்பாக சூர்யகுமார் யாதவ் பேசியதாவது: டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள இஷான் கிஷன், நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 3-வது வீரராக களமிறக்கப்படுவார். 3-வது இடத்தில் களமிறங்கி விளையாட அவருக்கு வாய்ப்பளிப்பது எங்களுடைய பொறுப்பு.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்திய அணிக்காக இஷான் கிஷன் விளையாடவில்லை. இந்த காலக் கட்டத்தில் அவர் தொடர்ச்சியாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். உலகக் கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணியில் இஷான் கிஷன் இடம்பெற்றுள்ளதால், ஷ்ரேயாஸ் ஐயருக்கு முன்பாக அவர் களமிறக்கப்படவுள்ளார். நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் யார் களமிறங்குவார் என்பது முற்றிலும் வேறு விதமான கேள்வி.
இந்திய அணிக்காக மூன்றாவது இடத்தில் விளையாடி வந்த திலக் வர்மாவுக்கு துரதிருஷ்டவசமாக காயம் ஏற்பட்டதால், அவர் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் முதல் மூன்று போட்டிகளில் விளையாட மாட்டார். திலக் வர்மாவுக்குப் பதிலாக அந்த இடத்தில் இஷான் கிஷன் சிறந்த தெரிவாக உள்ளார் என்றார்.
காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டிகளிலிருந்து விலகியுள்ள திலக் வர்மாவுக்குப் பதிலாக, அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் மூன்று டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம்பெற்றுள்ள போதிலும், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அவர் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.