முகப்பு
கிரிக்கெட்

இஷான் கிஷன் அதிரடி; பாகிஸ்தானுக்கு 176 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!

டி20 உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 175 ரன்கள் எடுத்துள்ளது.

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 3:52 PM
இஷான் கிஷன்
பகிர்:

டி20 உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 175 ரன்கள் எடுத்துள்ளது.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் கொழும்புவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட் செய்தது.

இஷான் கிஷன் அதிரடி; பாகிஸ்தானுக்கு 176 ரன்கள் இலக்கு!

முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். அமெரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் அபிஷேக் சர்மா கோல்டன் டக் அவுட்டான நிலையில், இன்றையப் போட்டியில் அதிரடியாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்றையப் போட்டியிலும் டக் அவுட்டாகி அவர் ஏமாற்றமளித்தார்.

அதன் பின், இஷான் கிஷனுடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். இஷான் கிஷன் அதிரடியில் மிரட்ட, திலக் வர்மா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 27 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். அதிரடியாக விளையாடிய அவர் 40 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.

இதனையடுத்து, திலக் வர்மா மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் நெருக்கடி அளிக்கும் விதமாக பந்துவீசினர். திலக் வர்மா 24 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹார்திக் பாண்டியா முதல் பந்திலேயே ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

கேப்டன் சூர்யகுமார் யாதவ் 29 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆட்டத்தின் இறுதியில் ஷிவம் துபே 17 பந்துகளில் 27 ரன்களும், ரிங்கு சிங் 4 பந்துகளில் 11 ரன்களும் எடுத்தனர்.

பாகிஸ்தான் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய சைம் ஆயுப் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கேப்டன் சல்மான் அகா, உஸ்மான் தாரிக் மற்றும் ஷாகின் ஷா அஃப்ரிடி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது.

summary

India, playing first match against Pakistan in the T20 World Cup, scored 175 runs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.