இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலும் டேரில் மிட்செல் அதிரடியாக விளையாடுவதை விரும்புவதாக நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் தெரிவித்துள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இந்த தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இருதரப்பு ஒருநாள் தொடரில் இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி பெறும் முதல் வெற்றி இதுவாகும்.
நியூசிலாந்து அணி வரலாற்று வெற்றி பெறுவதற்கு அந்த அணி வீரர் டேரில் மிட்செல் மிக முக்கியக் காரணமாக அமைந்தார். இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 84 ரன்கள் எடுத்த டேரில் மிட்செல், அடுத்த இரண்டு போட்டிகளிலும் சதங்கள் விளாசி அசத்தினார். இரண்டாவது போட்டியில் 131* ரன்கள் மற்றும் மூன்றாவது போட்டியில் 137 ரன்கள் எடுத்து அசத்தினார்.
டேரில் மிட்செலின் அதிரடி தொடர வேண்டும்
இந்தியா - நியூசிலாந்து இடையேயான ஒருநாள் தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை (ஜனவரி 21) முதல் தொடங்குகிறது.
இந்த நிலையில், ஒருநாள் போட்டிகளில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது போன்று இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலும் டேரில் மிட்செல் அதிரடியாக விளையாடுவதை விரும்புவதாக நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆரம்பத்தில் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக டேரில் மிட்செல் தடுமாறினார். ஆனால், அவரது கடின உழைப்பின் மூலம் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக நன்றாக விளையாட பயிற்சி மேற்கொண்டார். தற்போது அவர் சுழற்பந்துவீச்சை நன்றாக விளையாடுகிறார். ஒருநாள் போட்டிகளில் மிடில் ஓவர்களில் ஆட்டத்தினை கட்டுக்குள் வைத்திருக்க அவருக்குத் தெரிகிறது. ஒருநாள் போட்டிகளில் அதிரடியாக விளையாடியதைப் போன்றே, டி20 தொடரிலும் அவரது சிறப்பான ஆட்டத்தைத் தொடர்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.
இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி நாக்பூரில் நாளை (ஜனவரி 21) நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.