இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து - இலங்கை இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று (ஜனவரி 24) நடைபெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
முதலில் விளையாடிய இலங்கை அணி 219 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் சரித் அசலங்கா 45 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, தனஞ்ஜெயா டி சில்வா 40 ரன்களும், பவன் ரத்நாயகே 29 ரன்களும் எடுத்தனர். பதும் நிசங்கா மற்றும் குசல் மெண்டிஸ் தலா 26 ரன்கள் எடுத்தனர்.
இங்கிலாந்து தரப்பில் ஜேமி ஓவர்டான் மற்றும் அடில் ரஷீத் தலா மற்றும் ஜோ ரூட் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். லியம் டாஸன், வில் ஜாக்ஸ் மற்றும் ரிஹான் அகமது தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
ஜோ ரூட் அரைசதம்; இங்கிலாந்து வெற்றி
220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி, 49.3 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.
இங்கிலாந்து அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 90 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் ஹாரி ப்ரூக் 42 ரன்களும், பென் டக்கெட் 39 ரன்களும் எடுத்தனர். ஜோஸ் பட்லர் 21 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
இலங்கை தரப்பில் தனஞ்ஜெயா டி சில்வா மற்றும் ஜெஃப்ரி வாண்டர்சே தலா இரண்டு விக்கெட்டுகளையும், அஷிதா ஃபெர்னாண்டோ ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட்டுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இன்றையப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வருகிற ஜனவரி 27 ஆம் தேதி கொழும்புவில் நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.