இந்திய வீரர் கே.எல்.ராகுல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து மனம் திறந்துள்ளார்.
இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான கே.எல்.ராகுல் இந்திய அணிக்காக 67 டெஸ்ட், 94 ஒருநாள் மற்றும் 72 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட்டில் 4053 ரன்கள், ஒருநாள் போட்டிகளில் 3360 ரன்கள் மற்றும் டி20 போட்டிகளில் 2265 ரன்கள் குவித்துள்ளார்.
இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிடலாமா என்ற எண்ணம் தனக்கு இருந்ததாகவும், ஆனால் அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது எனத் தோன்றியதாகவும் கே.எல்.ராகுல் மனம் திறந்துள்ளார்.
இது தொடர்பாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சனின் யூடியூப் சேனலில் கே.எல்.ராகுல் பேசியதாவது: கிரிகெட்டைத் தாண்டி வாழ்க்கை இருப்பதால் ஓய்வு பெறுவது மிகவும் கடினமான முடிவாக இருக்காது. ஓய்வு குறித்து நான் யோசித்துள்ளேன். ஓய்வு முடிவு மிகவும் கடினமானதாக இருக்கப் போவதாக நான் நினைக்கவில்லை. உங்களுக்கு நீங்கள் நேர்மையாக இருந்தால், ஓய்வு பெறுவதற்கான நேரம் எதுவென்று உங்களுக்குத் தெரியும். அப்போது, ஓய்வை அறிவிக்காமல் காலம் தாழ்த்துவதில் எந்த ஒரு அர்த்தமும் இல்லை.
நான் ஓய்வு பெறுவதற்கு இன்னும் சிறிது காலம் இருக்கிறது. ஓய்வு பெற வேண்டும் எனத் தோன்றும்போது, ஓய்வு பெற்றுவிட்டு நீங்கள் விளையாடிய காலங்களை நினைத்து மகிழ்ச்சி கொள்ளுங்கள். உங்களுக்கென குடும்பம் இருக்கிறது. அதனால், இந்திய கிரிக்கெட்டுக்கு நான் மிகவும் முக்கியமான நபர் இல்லை என்பதை எனக்கு நானே கூறிக்கொள்ள முயற்சி செய்கிறேன். நான் விளையாடாவிட்டாலும் நாட்டில் கிரிக்கெட் வளரும். உலக கிரிக்கெட்டும் வளரும். பெரிய மாற்றம் ஏற்படப் போவதில்லை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.