ஆஸ்திரேலிய டி20 மகளிரணியின் புதிய கேப்டனாக சோஃபி மோலினெக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தனது முதல் செய்தியாளர் சந்திப்பில் மோலினெக்ஸ் ஆஸி. மகளிரணியை புதிய உச்சத்துக்கு எடுத்துச்செல்வதாகக் கூறியுள்ளார்.
யார் இந்த மோலினெக்ஸ்?
28 வயதான சோஃபி மோலினக்ஸ் இடது கை பந்துவீச்சாளர். இவர் பௌலிங் ஆல் ரவுண்டராக இருக்கிறார்.
ஆஸ்திரேலிய அணியில் 38 டி20 போட்டிகளில் 41 விக்கெட்டுகளும் 17 ஒருநாள் போட்டிகளில் 31 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.
மகளிர் பிபிஎல் தொடரில் 112 போட்டிகளில் 97 விக்கெட்டுகளும் 1,742 ரன்களும் எடுத்து அசத்தியுள்ளார்.
மூன்று அணிகளுக்கும் இவர் கேப்டனாகச் செயல்படுவாரென செய்திகள் வெளியான நிலையில், தற்போதைக்கு டி20 அணிக்கு மட்டுமே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மிகவும் பெருமையாக இருக்கிறது
தனது முதல் செய்தியாளர் சந்திப்பில் மோலினெக்ஸ் பேசியிருப்பதாவது:
ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு மிகவும் பெருமையாகக் கருதுகிறேன். குறிப்பாக, அணியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய அலீஸா ஹீலிக்குப் பிறகு இந்தப் பொறுப்பை ஏற்பதில் மிகுந்த பெருமை அடைகிறேன்.
இயல்பாகவே தலைமைப் பண்பைக் கொண்ட பல வீராங்கனைகள் அடங்கிய இந்த அணி மிகவும் வலுவாக இருக்கிறது.
அடுத்த கட்டத்துக்கு முன்னேற உழைக்க தயாராக இருக்கிறோம். ஓவ்வொருவருக்குமான தனித்த அடையாளத்துடனே இருப்பதால் இந்த அணி மிகவும் சிறப்பானது.
உலகக் கோப்பையை வெல்வோம்
கடைசி இரண்டு உலகக் கோப்பைகளை இழந்துள்ளோம். அதை நாங்கள் மறைக்கவில்லை; அதனால் நாங்கள் வெட்கமடையவும் இல்லை. நாங்கள் மீண்டு வருவதற்கான காலமிது.
எங்களிடம் சரியான மூலப் பொருள்கள் இருப்பதால் அடுத்த கட்டத்துக்கு முன்னேற ஆவலுடன் இருக்கிறோம்.
சிறிது தைரியத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். இனிமேலும் கட்டுப்படுத்தப்போவதில்லை. உலகக் கோப்பை வெல்லப் போகிறோம்.
நீண்ட காலமாக அந்த இடத்தில் (உலக சாம்பியனைக் குறிப்பிடுகிறார்) நாங்கள் இல்லை. அதனால், அங்கு இருக்க மிகவும் ஆவலுடன் இருக்கிறோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.