ஐபில்-லில் மின்னிய நட்சத்திரங்கள் என்று பட்டியல் போட்டால் நிறைய வீரர்கள் இடம்பிடிப்பார்கள். இந்த வருடம் எந்த வீரர் முத்திரை பதிப்பார் என்கிற ஒரு எதிர்பார்ப்பு எல்லோரிடமும் உண்டு. அது வேறு யாருமல்ல, நான் தான் என்று முதல் மேட்சிலேயே உணர்த்தியுள்ளார் சூர்யகுமார் யாதவ். இந்த வருடம் இவரை நன்கு கவனிக்கவேண்டும் என்கிற எண்ணத்தை உண்டுபண்ணிவிட்டார்.
நேற்றைய மேட்சின் மேன் ஆஃப் தி மேட்சாக தேர்வானவர், சிறப்பாகப் பந்துவீசிய மோர்னே மார்கல். ஆனால், கம்பீர், சூர்யகுமாரை கை நீட்டுகிறார். “சூர்யகுமார் தான் மேன் ஆஃப் தி மேட்ச். சந்தேகமில்லை. அதை நான் குறிப்பிட்டுச் சொல்லவேவருங்காலத்தில் இவரை அதிகம் எதிர்பார்க்கவேண்டியிருக்கும். நிச்சயம் சிறப்பான எதிர்காலம் உண்டு.” என்கிறார்.
சூர்யகுமார் யாதவ் மும்பையைச் சேர்ந்த 24 வயது வீரர். 2010-ல் ரஞ்சிப் போட்டியில் அறிமுகமானார். டெல்லிக்கு எதிரான முதல் போட்டியிலேயே 73 ரன்கள் எடுத்தார். அடுத்த வருட சீசனில் ரஞ்சியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் பட்டியலில் 4-ம் இடம் கிடைத்தது. 2011-ம் வருடம் மும்பை இந்தியன்ஸ் அணிக்குத் தேர்வானார். ரஞ்சிப் போட்டியிலேயே 80 ஸ்டிரைக் ரேட் வைத்திருப்பதால் டி20-க்கு இவருடைய ஆட்டம் பொருத்தமாக இருக்கும் என்று மும்பை நிர்வாகம் எண்ணியது. ஆனால், இவரை ஒரு மேட்சுக்கு மட்டுமே பயன்படுத்தியது.
2014 ஐபிஎல் ஏலத்தில், சூர்யகுமார் மீது சென்னையும் ஆர்வம் காட்டியது. மும்பையும் போட்டி போட்டது. இறுதியில் ரூ. 70 லட்சத்துக்கு இவரை விலைக்கு வாங்கியது, கொல்கத்தா.
இந்த வருட ரஞ்சிப் போட்டிக்கு மும்பை அணியின் கேப்டனாகத் தேர்வானார் சூர்யகுமார். எத்தகைய பெருமை இது. அதுவும் இந்த இளம் வயதில். தமிழ்நாடுக்கு எதிராக இன்னிங்ஸ் தோல்வி கண்டது மும்பை. ரஞ்சிப் போட்டியில் மும்பைக்கு இது 4-வது இன்னிங்ஸ் தோல்வி தான். அதுவும் 1951-க்குப் பிறகு இப்போதுதான். ஜம்மு - காஷ்மீர் அணியுடனும் தோல்வி. இதுபோதாதென்று சக வீரர்கள் சூர்யகுமாரின் நடத்தை பற்றி மும்பை நிர்வாகத்திடம் புகார்
அளித்தார்கள். பெரிய கனவுகளுடன் அணிக்குத் தலைமை தாங்கிய சூர்யகுமாருக்கு அடி மேல் அடி விழுந்தது. தலைமைப் பொறுப்பிலிருந்து விலகினார். ஆனாலும் ஒரு பேட்ஸ்மேனாக அவர் அணிக்குப் பெரிய பலமாக இருந்தார்.
கடைசிவரை பிரமாதமாக ஆடி கொல்கத்தா அணியை வெற்றி பெறச் செய்வது இது முதல்முறை அல்ல. சென்ற வருட சாம்பியன்ஸ் லீகில் பெர்த் அணிக்கு எதிராக 19 பந்துகளில் 43 ரன்கள் அடித்து (4 சிக்ஸர்கள்) அணியை வெற்றி பெறவைத்தார். 15 பந்துகளில் 27 ரன்கள் வேண்டும் என்கிற நிலைமையை அழகாகக் கையாண்டார். அழுத்தம் கொடுக்கும் தருணங்களில் சூர்யாகுமாரின் எண்ணம் இருப்படி இருக்குமாம். “போட்டியில் வெற்றி பெற்றால் அதை எப்படி கொண்டாடவேண்டும்? இந்த நிலைமையில் ஒரு பெரிய வீரர் ஆடினால் எப்படி இருக்கும்? என்றுதான் யோசிப்பேன்” என்கிறார் சூர்யகுமார்.
நேற்றைய மேட்சில், சூர்யாகுமார் ஆட வந்தபோது கொல்கத்தாவுக்கு 48 பந்துகளில் 71 ரன்கள் தேவையிருந்தது. கஷ்டமான இலக்கு இல்லை என்றாலும் மலிங்கா என்கிற அச்சுறுத்தல் இருக்கும்போது என்னவேண்டுமானாலும் நடக்கலாம். தனக்கு வீசப்பட்ட 2-வது பந்திலேயே சிக்ஸர் அடித்தார். 15-வது ஓவரில் கம்பீர் அவுட் ஆனார். அப்போதாவது ஆக்ரோஷம் குறைந்ததா? பும்ரா வீசிய அடுத்தப் பந்தில் இன்னொரு சிக்ஸர் அடித்தார். பும்ராவைப் பார்த்தால் எப்படியிருந்ததோ! அவர் வீசிய அடுத்த ஓவரில் மேலும் இரண்டு சிக்ஸர்கள்! பரபரப்பாக சென்று கொண்டிருந்த மேட்ச், கொல்கத்தா பக்கம் திரும்பியது சூர்யகுமாரால் தான்.
20 பந்துகளில் 46 ரன்கள் அடித்து சுலபமாக காரியத்தை முடித்தார். 5 சிக்ஸர்கள்! இந்தப் போட்டி ஆரம்பமாகும் முன்பு, சூர்யகுமாருக்குப் புதிய பதவி கிடைத்தது. கொல்கத்தா அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார். “நாங்கள் களத்துக்கு வெளியே சூர்யகுமாரை ஒரு லீடராகவே பார்க்கிறோம். அவரை வளர்க்க விரும்புகிறோம். இந்த ஐபிஎல் முடிந்தபிறகு அவர் மேலும் பொறுப்புள்ளவராக மாறுவார். நல்ல எதிர்காலம் அவருக்குக் காத்திருக்கிறது” என்கிறார் கம்பீர்.
18-வது ஓவரில் மலிங்காவின் பந்தை சிக்ஸருக்கு அனுப்பியபோது ஈடன் கார்டன் நம்பமுடியாமல் பார்த்தது. ஒரு புதிய நட்சத்திரம் ஒன்று தோன்றியதை அந்தக் தருணத்தில் உணரமுடிந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.