ஐபிஎல்

சிஎஸ்கேவைக் காப்பாற்றிய ’யார்க்கர்’ நெஹ்ரா!

2015 ஏலத்தில் இர்பான் பதானைத் தேர்வு செய்தது சென்னை. இதனால் நெஹ்ராவின் வாய்ப்பு பறிபோகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ச. ந. கண்ணன்

சென்னை சூப்பர் கிங்ஸின் முதல் போட்டியில் நெஹ்ராவுக்கு அணியில் இடம் கிடைக்காது என்றே பலரும் நினைத்தார்கள். இர்பான் பதானின் தேர்வு நெஹ்ராவுக்கு நெருக்கடி தரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்தியா சாம்பியனான 2011 உலகக்கோப்பையில் இடம்பெற்ற வீரர், நெஹ்ரா. அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக 10 ஓவர்களில் 33 ரன்கள் மட்டுமே கொடுத்து இரண்டு விக்கெட்டுகள் எடுத்தார். இருந்தும் இறுதிப் போட்டியில் அவரால் ஆடமுடியவில்லை. காயம் காரணமாக தங்கமான வாய்ப்பை இழந்தார். நம்புவீர்களா, அதோடு நெஹ்ராவின் சர்வதேச கிரிக்கெட்டின் கதை முடிந்தது. அதன்பிறகு ரசிகர்கள் அவரை ஐபிஎல் போட்டிகளில் தான் காணமுடிந்தது.

புதுமுகங்களின் வரவால் நெஹ்ரா பின்னுக்குத் தள்ளப்பட்டார். ஜாகீர் கான் பற்றியாவது எல்லோரும் பேசுவார்கள். ஆனால், 35 வயதில் நெஹ்ராவின் கதை முடிந்ததாகவே கணிக்கப்பட்டது. இருந்தும் நெஹ்ரா தொடர்ந்து போராடினார். ஐபிஎல்-லில் தன் இருப்பை உறுதிப்படுத்தினார். இந்திய அணியில் இடம் கிடைக்காமல் போனாலும் கிடைத்த வாய்ப்புகளில் தன்னை நிரூபிக்க முயன்றார்.

2008-ல் மும்பை இந்தியன்ஸில் ஆரம்பித்து, டெல்லி டேர்டெவில்ஸ், புனே வாரியர்ஸ் மீண்டும் டெல்லி டேர்டெவில்ஸ் என மாறிக் கொண்டே இருந்தார். 2014 ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் 2 கோடி ரூபாய்க்கு நெஹ்ராவைத் தேர்ந்தெடுத்தபோது பலருக்கும் ஆச்சரியம். இந்த முடிவா சரியா என்றுகூட பலரும் விமரிசித்தார்கள். மோஹித் சர்மா, ஈஷ்வர் பாண்டேவுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டதால் நெஹ்ராவால் 4 மேட்சுகள் மட்டுமே ஆடமுடிந்தது. அதிலும் ப்ளே ஆஃப் போட்டியில் பஞ்சாப்புக்கு எதிராக 4 ஓவர்களில் 51 ரன்கள் கொடுத்தார். ஐபிஎல்-லில் சென்னைக்கு உதவமுடியாமல் போனாலும் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் தன்னை நிரூபித்தார் நெஹ்ரா. 5 மேட்சுகளில் 10 விக்கெட்டுகள் எடுத்து அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலர்கள் பட்டியலில் 3-ம் இடம் பிடித்தார்.

2015 ஏலத்தில் இர்பான் பதானைத் தேர்வு செய்தது சென்னை. இதனால் நெஹ்ராவின் வாய்ப்பு பறிபோகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காயம் காரணமாக இர்பானால் முதல் போட்டியில் இடம்பெறமுடியவில்லை. நெஹ்ரா அணியில் இடம்பெற்றார்.

சென்னை அணி 150 ரன்கள் மட்டுமே எடுத்ததால் பவுலர்கள் தான் சென்னைக்கு வெற்றி தேடித் தரவேண்டும் என்கிற நிலை. அஸ்வின், பிராவோ, மோஹித் சர்மா நன்றாகப் பந்துவீசிவிடுவார்கள். நெஹ்ராவும் ஈஸ்வர் பாண்டேவும்தான் சொதப்பாமல் இருக்கவேண்டும் என்று ரசிகர்கள் பயந்தார்கள். ஆனால் இந்த மேட்சில் குறைந்த ரன் விகிதத்தில் பந்துவீசியவர்கள் இரண்டு பேர். அஸ்வினும் நெஹ்ராவும். 6.25.

குறைந்த ரன்களை வைத்துக்கொண்டு பந்துவீசும்போது தொடக்க ஆட்டக்காரர்களைச் சீக்கிரம் வீழ்த்தவேண்டும். மூன்றாவது ஓவரில் இரு தொடக்க வீரர்களையும் வெளியேற்றினார் நெஹ்ரா. அவருடைய அடுத்த ஓவரில் இன்னொரு விக்கெட்டும் விழுந்தது. அப்போது, மூன்று ஓவர்கள் வீசி 17 ரன்கள் மட்டுமே கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் நெஹ்ரா. டெல்லி அணியின் முதல் மூன்று விக்கெட்டுகளையும் எடுத்து இதர பவுலர்களின் வேலையைச் சுலபமாக்கினார். இதனால் நெருக்கடிக்கு ஆளான டெல்லி பேட்ஸ்மேன்கள் தவறுகள் செய்து மேலும் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தார்கள்.

நெஹ்ரா மீண்டும் பந்துவீச வந்தபோது, 2 ஓவர்களில் 27 ரன்கள் தேவை என்கிற நிலைமையில் இருந்தது டெல்லி. ஒருவேளை, நெஹ்ரா 12 அல்லது 15 ரன்கள் கொடுத்துவிட்டால் கடைசி ஓவரை வீசவரும் பிராவோவுக்கு கடும் நெருக்கடி ஏற்படும்.

யார்க்கர் பந்தில் இந்திய பவுலர்களுக்கு நிபுணத்துவம் கிடையாது. பல இளம் பவுலர்கள் யார்க்கர் பந்து வீச சிரமப்படும்போது 19-வது ஓவரில் யார்க்கரால் மார்கலை நிலைகுலைய வைத்தார் நெஹ்ரா. அவருடைய பந்தை சிக்ஸருக்கோ பவுண்டரிக்கோ அனுப்ப மிகவும் சிரமப்பட்டார் மார்கல். அந்த ஓவரில் 8 ரன்கள் கொடுத்தாலும் நெஹ்ராவின் பந்துவீச்சை சமாளிக்க டெல்லி வீரர்கள் போராடவேண்டியிருந்தது. ஆட்டத்தின் திருப்புமுனை ஓவரை வீசி பிராவோவின் வேலையை எளிதாக்கினார் நெஹ்ரா. "நெஹ்ராவுக்கு அடிக்கடி காயங்கள் ஏற்படும். ஆனாலும் தன் மீது நம்பிக்கை வைப்பார். கஷ்டப்படாமல் மிக வேகமாக வீசும் சில இந்திய பவுலர்களில் நெஹ்ராவும் ஒருவர்” என்று மேன் ஆஃப் தி மேட்ச் நெஹ்ராவைப் பாராட்டுகிறார் தோனி.

கடைசி ஓவர்களில் யார்க்கருடன் துல்லியமாக வீசுகிற பவுலர் சென்னைக்கு மிகவும் தேவை. நெஹ்ரா, தோனிக்கு இன்னும் நிறைய ’யார்க்கர்’ ஓவர்களை வழங்கவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

பெர்லின் திரைப்பட விழாவில் அசாம் பெண் இயக்கிய படத்துக்கு விருது!

SCROLL FOR NEXT