முகப்பு
ஐபிஎல்

முதல் 10 ஓவரில் 64/5; கடைசி 10 ஓவரில் 121/3: டெல்லிக்கு 186 ரன்கள் இலக்கு

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் எடுத்துள்ளது.

Updated On : 30 மார்ச் 2019, 10:07 pm IST
நன்றி: iplt20.com
பகிர்:


டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் எடுத்துள்ளது. 

ஐபிஎல்-இன் இன்றைய (சனிக்கிழமை) 2-ஆவது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். சுனில் நரைன் காயம் காரணமாக இந்த போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக நிகில் நாயக் சேர்க்கப்பட்டு, கிறிஸ் லின்னுடன் தொடக்க ஆட்டக்காரராகவும் களமிறக்கப்பட்டார்.

முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது டெல்லி அணிக்கு சாதகமாக அமைந்தது. நிகில் நாயக் 16 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 7 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரைத்தொடர்ந்து, உத்தப்பா 11, லின் 20, ராணா 1 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பிறகு, கேப்டன் கார்த்திக்குடன் ஷூப்மன் கில் களமிறங்கினார். 

Advertisement

Advertisement

விக்கெட்டுகள் விழுந்த போதிலும் பதற்றமடையாத கார்த்திக் துரிதமாக ரன் குவித்தார். எனினும், இந்த பாட்னர்ஷிப் நல்ல நிலையில் செல்ல தொடங்கிய நேரத்தில் கில் துரதிருஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். இதனால், அந்த அணி 61 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. 

கார்த்திக் - ரஸல் ஜோடி:

இதையடுத்து, அனுபவ வீரர்களான கார்த்திக் மற்றும் ரஸல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி அணி இக்கட்டான நிலையில் உள்ளது என்கிற நெருக்கடி இல்லாமல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 13 மற்றும் 14-ஆவது ஓவரில் மட்டும் இந்த ஜோடி பெரிதளவு ரன் குவிக்கவில்லை. 

ரஸல் 200 ஸ்டிரைக் ரேட்டுக்கு மேல் தான் ரன் குவித்து விளையாடினார். சுழற்பந்துவீச்சாளர்கள், வேகப்பந்துவீச்சாளர்கள் என அனைவரது ஓவர்களிலும் சிக்ஸர்கள் பறக்கவிட்டார். இதனால், ரஸல் 24-ஆவது பந்தில் அரைசதத்தை அடித்தார். அவர் அரைசதம் அடித்த கையோடு 2 பவுண்டரிகளை அடித்து மோரிஸ் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 28 பந்துகளில் 4 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் உட்பட 62 ரன்கள் எடுத்தார். கார்த்திக் - ரஸல் ஜோடி 6-ஆவது விக்கெட்டுக்கு 52 பந்துகளில் 91 ரன்கள் சேர்ததது. இந்த பாட்னர்ஷிப் தான் ஆட்டத்தை மீண்டும் கொல்கத்தா அணியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. 

அவரைத் தொடர்ந்து, தினேஷ் கார்த்திக்கும் 35-ஆவது பந்தில் அரைசதத்தை அடித்தார். ஆனால், அரைசதம் அடித்த அடுத்த பந்திலேயே அவர் ஆட்டமிழந்தார். 

ரஸல் மற்றும் கார்த்திக் ஆட்டமிழந்த போதும் கொல்கத்தாவின் பவுண்டரிகள் தொடர்ந்துகொண்டே தான் இருந்தது. இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய பியூஷ் சாவ்லா 1 பவுண்டரி, 1 சிக்ஸர் உட்பட 12 ரன்கள், குல்தீப் யாதவ் 1 பவுண்டரி உட்பட 10 ரன்கள் எடுத்தனர். இதன்மூலம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் எடுத்துள்ளது. 

டெல்லி கேபிடல்ஸ் அணி சார்பில் ஹர்ஷல் படேல் 2 விக்கெட்டுகளையும், லாமிசானே, ரபாடா, மோரிஸ் மற்றும் அமித் மிஸ்ரா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.